கர்ப்பிணிப் பெண்களுக்கான மருந்துகள் ரொட்டரி இன்டர்நெஷனலால் நன்கொடை

இலங்கையின் சுகாதார அமைப்புக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கும் திட்டத்தின் கீழ், ரொட்டரி இன்டர்நெஷனல் 60 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை கையளித்துள்ளது.

ரொட்டரி இன்டர்நெஷனலின் தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ற்று உத்தியோகபூர்வமாக இதனை கையளித்தார்.

யுனிசெஃப் உடன் இணைந்து ரொட்டரி இண்டர்நெஷனல் வழங்கிய மருந்துகளில், கர்ப்பிணிப் பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், பிரசவத்தின்போது தேவைப்படும் மருந்துகள் மற்றும் குழந்தைகளின் நோய்களுக்கான மருந்துகள் ஆகியவை அடங்கும்.

ரொட்டரி இன்டர்நெஷனல் மூலம் இலங்கைக்கு மருந்துகளை வழங்கும் திட்டத்தின் முதல் படி இதுவாகும் என்றும், எதிர்காலத்தில் மேலும் கையிருப்பு வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரம்புக்வெல்ல, ரொட்டரி இன்டர்நெஷனல் மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் இலங்கை நீண்டகால உறவைக் கொண்டுள்ளதுடன், நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் மருத்துவ உதவி மிகவும் பாராட்டத்தக்கது என்றார்.

சுகாதாரத் துறைக்கு ரொட்டரி இன்டர்நெஷனல் வழங்கிய ஆதரவைப் பாராட்டிய அமைச்சர், போலியோவை ஒழிப்பதில் அவர்களின் தலையீட்டையும் நினைவு கூர்ந்தார்.

ரொட்டரி உறுப்பினர்கள் ஒரு முக்கியமான நேரத்தில் இலங்கையில் மருந்துகளின் தேவையை கண்டறிந்து பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மையுடன் செயற்படும் வகையில், ரொட்டரி இன்டர்நெஷனல் யுனிசெஃப் மூலம் உதவிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யுனிசெஃப் இலங்கைக்கு குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் நிலையில் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறது என யுனிசெஃப் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் தெரிவித்துள்ளார்.

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக யுனிசெஃப்பால் இயக்கப்படும் Life Line Sri Lanka ஒன்லைன் தளத்தின் ஊடாக இந்த உதவி வழங்கப்படுகிறது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.