தமிழரசுக்கு அகவை 73! வழக்கிழந்த தமிழரசுச் சின்னம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியை தற்போது நான் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டாரத்தில் பிறந்த மூதறிஞர் ராணி சட்டத்தரணி தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம், கோப்பாய் கோமான் வன்னியசிங்கம், டாக்டர் நாகநாதன் ஆகியோரை ஸ்தாபகர்களாகக் கொண்டு இதேநாளில் 1949 ஆம் ஆண்டு மார்கழி 18 ஆம் திகதி – இற்றைக்கு 73 வருடங்களுக்கு முன்பு – வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாவிட்டபுரக் கந்தனின் அருளாசியுடன் ஆலய வீதியில் வைத்து உருவாக்கினர்.

தமிழர்களுக்கு தனி நாடுதான் ஒரே வழி என்ற தீர்க்கசிந்தனை நோக்கோடு, சமஷ்டித் தீர்வை இலட்சிய நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டதே தமிழ் அரசுக் கட்சி. தனித் தமிழீழக் கோட்பாட்டை முன்வைத்து 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானமாக ‘தமிழீழ’ பிரகடனத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவர் அமிர்தலிங்கத்தால் –

01. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.

02. அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.

03. அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும். – ஆகிய மூன்று அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டு தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதனால் அந்தக் காலத்தில் அமிர்தலிங்கம் ‘தளபதி’ என்று அழைக்கப்பட்டார்.

ஆனால், தனி நாட்டுக் கோரிக்கை முன்வைக்க முன்னரே தந்தை அவர்கள் தனியரசுக் கொள்கையை கட்சிப் பெயராகக் கொண்டு ‘தமிழரசு’ என்று பெயர் சூட்டினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியும்
மூவேந்தர்களின் முடியுடையும்!

ஈழத் தமிழர்களின் மனங்களில் ஆள ஊடுருவி, தமிழர்களுக்குத் தனி அரசு உருவாக்கப்படவேண்டும் என்ற தீர்க்கதரிசன சிந்தையுடன் தெல்லிப்பழையில் உதித்த தெய்வமகன் மூதறிஞர் தெல்லியூர் சாமுவேல் ஜோசப் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தால் 1949 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதி உருவாக்கப்பட்டதே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி. இந்தக் கட்சியை தந்தை அவர்கள் உருவாக்குகின்றபோது ஒரு தீர்க்கதரிசனத் தன்மை – தூரநோக்குப் பார்வை – என்பன காணப்பட்டன. ராணி சட்டத்தரணி தமிழரசு ஸ்தாபகர் என்பதாலோ என்னவோ – அவரது பரந்து விரிந்த அறிவு – ஆளுமைத்திறன் – தீர்க்கதரிசன ஆற்றலோ என்னவோ – இன்று அனைவரும் சிந்தித்து அதிசயிக்கும் வகையில் கட்சியின் பெயர், சின்னம், கொள்கை விளக்கம் என்பன காணப்பட்டன.

ஆரம்பத்தில் தமிழர்களுக்கு சமஷ்டி தீர்வின் அவசியம் என்பதை முன்வைத்து சமஷ்டிக் கட்சி என்ற பெயரிலேயே 1949 இல் கட்சி உதயம் பெற்றது. பின்னர், சமஷ்டிக்கு அப்பால் தமிழர்களுக்கு தனி அரசு ஒன்று தேவை என்பதை உணர்ந்த எஸ்.ஜே.வி. அவர்கள் ‘தமிழ் அரசுக் கட்சி’ என்ற பெயரை சூட்டினார்.

1972 ஆம் ஆண்டு ‘தமிழர்கள் ஒன்றாதல் வேண்டும்’ என்ற அவசியத்தை உணர்ந்த தந்தை செல்வா, இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றை இணைத்து தமிழர் ஐக்கிய கூட்டணியை உருவாக்கினார். இதன் நிறுவுநர்களாக தந்தையுடன் ஜி.ஜி.பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் கூட்டுத் தலைவர்களாகச் செயற்பட்டனர்.

1976 ஆம் ஆண்டு இந்த அமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் பெயர்மாற்றம் பெற்று, அதே 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நடத்தப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாட்டில் தமிழீழப் பிரகடனமும் கொண்டுவரப்பட்டு, தமிழர்களின் பேராதரவை அந்தக் கட்சி பெற்று 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகினார். இது வரலாறு. நான் இங்கு வரலாறு கற்பிக்க வரவில்லை. ‘இன்று நாம்தான் தமிழரசுக் காறர்’ என்று தமிழரசின் ஆதி – அந்தம் எதுவுமே தெரியாது – அறியாது – அறிய முற்படாது – அல்லது அறியும் அறிவற்று – தேடலற்று – ”குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்ட” தமிழரசுக் கட்சி என்ற குதிரையில் ஏறி, தமது குடும்பப் பிழைப்புக்காக அரசியலைத் தொழிலாகப் புரிபவர்களுக்கு சில உண்மைகளைப் புரியவைப்பதற்காக இப்பத்தியை வரைகின்றேன்.

1976 ஆம் ஆண்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ‘தனித்தமிழ் ஈழம்’ என்ற வார்த்தையைப் பிரகடனப்படுத்தி, அதன்பின் ஆயுதப்போராட்டம் ‘தனித்தமிழீழ’ கோரிக்கையுடன் வீறுகொண்டெழுந்து, நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டு மௌனித்து மீண்டும் அஹிம்சைப் போராட்டமாக ஒரு தசாப்தம் கடந்து, அதிகாரப்பகிர்வு, சமஷ்டி, 13 இற்கு அப்பால், பிராந்தியங்களின் ஒன்றியம் என்றெல்லாம் தீர்வுகள் தொடர்பில் பேசுகின்றோம். 1976 ஆம் ஆண்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், ”நாட்டின் அரசமைப்புக்கு உட்பட்டு நாடாளுமன்றில் நான் செய்த சத்தியப்பிரமானத்துக்கு முரணாக தனித் தமிழீழத்தை பிரகடனம் செய்கிறேன்” – என்று தமிழீழம் பிரகடனம் செய்யப்பட்டமையையும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் நாம் எல்லோரும் தனி நாட்டு பிரகடனம் என்று பெருமையுடன் பேசுகின்றோம்.

ஆனால், 1976 வட்டுக்கோட்டை தீர்மானம் – தனித் தமிழீழப் பிரகடனம் உதயமாகுவதற்கு முன்பே – எமது கட்சியின் தந்தை செல்வா 1949 ஆம் ஆண்டு தனித் தமிழ் அரசை கட்சிப் பெயரிலேயே பௌவியமாகப் பிரகடனப்படுத்தியுள்ளார். இன்றும் அந்தப் பெயரிலேயே எமது கட்சி இயங்குகின்றது.

தமிழரசுக் கட்சிக்கு வந்த சட்ட சவால்கள்
செல்வாவாலும் சுமந்திரனாலும் முறியடிப்பு

1961 ஆம் ஆண்டு சில மாதங்கள் தடை செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, 1976 இல் பாரியதொரு சட்ட சவாலுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. அதை தந்தை செல்வா தலைமையிலான சட்ட விற்பன்னர்கள் முறியடித்து வெற்றி கண்டார்கள். போருக்கு பின்னர் 2013 ஆம் 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கைத் தமிழரசுக்கட்சியை தடை செய்யவும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறைக்கனுப்பவும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முதல் 5 வழக்குகளும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற எமது வடக்கு மாகாண சபை தேர்தல் அறிக்கையில் பிரிவினையை கோருவதாகவும் அரசமைப்பின் 6 ஆம் திருத்தத்துக்கு மாறான – முரணான – செயற்பாடு என்றும் முறைப்பாடு செய்யப்பட்டது.

2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட 6 ஆவது வழக்கிலே இலங்கைத் தமிழரசுக்கட்சியினுடைய யாப்பு இணைப்பாட்சியைக் கொள்கையாகக் கொண்டிருப்பதன் காரணமாக பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த வழக்கு முதலிலே விசாரிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. சந்திரசோம எதிர் மாவை சேனாதிராசா என்கின்ற இந்த வழக்கின் தீர்ப்பு 2017 ஓகஸ்ட் 4 ஆம் திகதி பிரதம நீதியரசர் உட்பட 3 நீதிபதிகளடங்கிய உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

தமிழரசின் பொக்கிஷம் ‘தந்தைக்குப் பின் தமிழரசைக் காக்கவந்த தனையன்’ ஜனாதிபதி சட்டத்தரணி, சட்டமேதை எம்.ஏ.சுமந்திரனின் வாதத் திறனால், அந்த வழக்கு ‘சூறாவளியில் அகப்பட்ட பஞ்சாக’ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கிடைக்கப்பெற்றது.

இந்த தீர்ப்பின்படி ”இறைமை, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் இணைப்பாட்சி ஆட்சிமுறை ஒன்றைக் கோருவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு உரித்துண்டு” என்று கூறப்பட்டுள்ளது. இன்றைக்கு தமிழரசுக்காரர் நாம்தான் என்று தம்பட்டமடிக்கும் முன்னாள், இன்னாள் எம்.பிக்கள் அனைவரும் சொத்துசுகத்துடன் வாழ்வதற்கு சுமந்திரன் இந்த வழக்கை முறியடித்து வெற்றிகொண்டமையே காரணமாகும். வழக்கு தோற்றிருந்தால் கட்சி முடக்கப்பட்டு எம்.பிக்களாக இருக்கின்ற தமிழரசுக் காரர்களின் சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டிருக்கும்.

தமிழரசுக் கட்சியின்
சிறப்புமிக்க சின்னம்

பண்டைய தமிழ் இலக்கிய வரலாற்றில் ”வடவேங்கடம் தென்குமரி யாயிடை தமிழ் கூறும் நல்லுலகத்து” என்று சங்கத் தமிழ் இலக்கியம் தொல்காப்பியம் குறிப்பிட்டமை போன்று, வடக்கே வேங்கடம் முதல் தெற்கே கன்னியாகுமரி ஈறாகப் பரந்துபட்டுக் கிடந்த தமிழகத்தை மூவேந்தர்கள் முச்சங்கமமைத்து ஆண்டார்கள் என்று இலக்கியங்கள் இயம்பிள. ”ஆளக்கடலெங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று….” என்று எமது ஈழத்துக் கவிஞர் ஒருவரின் புரட்சிப் பாடல் வரிகள் நாம் சிறுவர்களாக – மாணவர்களாக – இருக்கின்ற காலத்தில் அனைவர் மனத்திலும் ஆள ஊடுருவி, அனைவர் நாவிலும் மெய்ம்மறந்து ஒலிக்கும்.

தந்தை செல்வா கட்சியை ஆரம்பிக்கும்போது இரண்டு சின்னங்களை உருவாக்கினார்.

ஒன்று – கட்சி சின்னம் – அது வில்லும் அம்பும், புலி, மீன் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

இரண்டாவது – தேர்தல் சின்னம் – அது வீடு. இன்று ”தமிழரசின் தூன்கள் நாங்கள்தான் மற்றெல்லாம் இடையில் வந்த இடைச்செருகல்” என்று தம்பட்டமடித்து, வரலாறு தெரியாதவனுக்கு பிழையான வரலாற்றைக் கற்பிதம் செய்யும் தமிழரசின் பழசுகள் தமிழரசுக் கட்சியின் கடிதத் தலைப்புகளுக்குப் பயன்படுத்துவது தேர்தல் சின்னமாகிய வீடே!

கடிதத் தலைப்புக்குரிய கட்சி சின்னம் ஆகிய சேர – சோழ – பாண்டியராகிய மூவேந்தர்களின் சின்னங்களையும் உள்ளடக்கி தந்தையால் தமிழரசுக் கட்சி சின்னமாக உருவாக்கப்பட்ட வில்லும் அம்பும், புலி, மீன் அல்ல. இப்படி ஒரு சின்னமிருக்கு என்று இந்த சிரேஷ்ட பிரஜைகளுக்கும் தெரியுமோ தெரியாது.
நான் முகநூல் பக்கம் வருவது அரிது.

2017 ஆம் ஆண்டு நான் முகநூலில் இதேதினத்தில் பதிவிட்ட பழைய பதிவொன்று இன்று எனக்கு மீட்டலைத் தந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதியில் – தந்தை செல்வாவின் தொகுதியில் – தற்போது மாவை சேனாதிராசாவின் தொகுதியில் – எனது தந்தை அமரர் க.சிவபாலசுந்தரம் துணை செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில் 28-12-1963 ஆம் ஆண்டு தெல்லிப்பழைக் கிளையை அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையர்க்கரசி சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்த 58 வருடங்களுக்கு முற்பட்ட அழைப்பிதழே எனக்கு மீட்டலைத் தந்தது.

அந்தக் கடிதத்தை இங்கு மீள்பிரசுரம் செய்யும் அதேவேளை, முகநூலில் சிற்சில வேளைகளின் கட்சியின் தவறுகளை நான் அவ்வப்போது கட்சி நலனுக்காக சுட்டிக்காட்டியமைக்காக, கடிதத்தலைப்பைப் பாவிக்கும் தகுதியற்ற ஒழுகாற்றுக் குழுத்தலைவரால் 2020 ஆம் ஆண்டு எனக்கு அனுப்பப்பட்ட – எனது பிரதேசசபை உறுப்பினர் பதவியை ஒருவருடத்துக்கு வெற்றும் வெறிதுமாக்கும் நோக்குடனான – கடித தலைப்பின் நிழற்பிரதியையும் இங்கு தருகின்றேன்.

என்றும் தமிழரசு சேவையில்,
தெல்லியூர் சி.ஹரிகரன்
தலைவர் – தெல்லிப்பழை மூலக்கிளை
உப தலைவர் – காங்கேசன்துறை தொகுதி
இலங்கைத் தமிழரசுக் கட்சி,
உறுப்பினர் – வலி.வடக்கு பிரதேசசபை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.