நல்லிணக்கத் திட்டத்தில் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி இடைவெளி குறைக்கப்பட வேண்டும்-ஜனாதிபதியிடம் அங்கஜன் கோரிக்கை.
சாவகச்சேரி.
தற்போது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள நல்லிணக்கத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த யுத்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தி இடைவெளி குறைக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
ஜனாதிபதியின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற சர்வ கட்சி மாநாட்டில் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்பாக தீர்வு ஒன்றை வழங்க ஜனாதிபதி விருப்பம் தெரிவித்திருந்தார்.ஜனாதிபதி விரும்பினாலும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்பாக தீர்வு கிடைக்க சந்தர்ப்பம் இல்லை.ஆனால் பல விடயங்களில் இணக்கப்பாடு வரக்கூடிய நிலை ஒன்று காணப்படுகின்றது.
எமது பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதனை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அரசியல் கைதிகள் விடுவிப்பு,காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் காணிப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனக் குறித்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
இவற்றுக்கு மேலாக நான் ஜனாதிபதியிடம் கேட்டது என்னவென்றால்;
35வருட கால உள்நாட்டு யுத்தத்தால் நாம் பல விடயங்களை இழந்து விட்டோம். கல்வி,விவசாயம்,கடற்தொழில் என அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சி கண்டுள்ளோம்.
நல்லிணக்கம் என்ற அடிப்படையில் முதலில் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு ஏனைய மாகாணங்களுக்கு சரி சமமாக எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களும் அபிவிருத்தியில் வளர்ச்சி காண வேண்டும்.
எனவே நல்லிணக்கத் திட்டத்தில் அபிவிருத்தி இடைவெளிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தேன்.
இதன்போது ஜனாதிபதி இந்த வேலைத்திட்டத்தில் இணக்கப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும்-ஐனவரி மாதம் 13ஆம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி முன்னோக்கிப் பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும், பெப்ரவரி மாதம் பொருளாதாரம் சம்பந்தமாக சர்வ கட்சி தலைவர்களுடன் சந்திப்பு ஒன்று இடம்பெறவிருப்பதாகவும் கூறியிருந்தார்.
எனவே அனைவரும் உண்மையாகவும்-நேர்மையாகவும் செயலாற்றும் பட்சத்தில் பெப்ரவரி 4ம் திகதிக்கு முன்பாக ஓர் இணக்கப்பாட்டிற்கு வர முடியும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை