4 ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதற்கு அச்சமில்லாத போதிலும், நான்கு வருடங்களின் பின்னரே ஜனாதிபதி தேர்தலை சட்டப்பூர்வமாக அறிவிக்க முடியும் என பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி  (SJB) நேற்று (21) சுட்டிக்காட்டியுள்ளது.

SJB பொதுச் செயலாளர் எம்.பி. ரஞ்சித் மத்தும பண்டார இதுகுறித்து தெரிவிக்கையில் , “எந்தத் தேர்தலுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஜனாதிபதி தேர்தலை ஜனாதிபதி அறிவிக்க முடியும். நான்கு வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலைப் பற்றி பேசுபவர்கள் சட்டரீதியாக நடத்த முடியாத ஒன்றைக் குறிப்பிடுகின்றனர், ”என்று கூறினார்.

இதேவேளை, அரசியலமைப்பின் பிரகாரம் நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு முடியும் என எதிர்கட்சியின் பிரதம கொறடாவும் SJB பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

“தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உள்ளது, மேலும் ஐக்கிய மக்கள் சக்தி எந்த தேர்தலிலும் போட்டியிட தயாராக உள்ளது. இதில் எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரமும் சட்ட உரிமையும் ஜனாதிபதிக்கே உள்ளது. அவர் தேர்தலை அழைத்தால் அதை எதிர்கொள்ள வேண்டும், நாங்கள் முன் வந்து போட்டியிட வேண்டும். எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்,” என்றார்.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, செவ்வாய்க்கிழமை (20) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய சூழ்நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஒரே தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் வேட்பாளராக இந்த நாட்டைக் காப்பாற்றக்கூடிய ஒரே வேட்பாளராக நாங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்வைக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.