யாழ். மாநகர சபை முதல்வர் இராஜினாமா

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இன்று சனிக்கிழமை(31) முதல் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் மூலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் 2022 டிசம்பர் 21ஆம் திகதி தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில் ஒன்பது நாட்களின் பின்னர் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் மணிவண்ணன் இராஜினாமா முடிவை எடுத்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

2020 டிசம்பர் 30 இல் மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராகத் தெரிவானார்.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.