உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக ஐ.தே.க நேர்காணல்களை முன்னெடுக்கிறது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கும், ஆசன அமைப்பாளர்களை நியமிப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று நேர்காணல்களை நடத்தவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஆறு குழுக்கள் மூலம் நேர்காணல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் அமைப்பாளர்களை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை விண்ணப்பங்கள் கோரப்பட்ட பின்னர் ஏற்கனவே ஏராளமான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வேட்புமனுக்களை கோரியுள்ளது.

தகுதியின் அடிப்படையில் தெரிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும், இளைஞர் மற்றும் பெண்களுக்கான ஒதுக்கீடுகளை வழங்குமாறு கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவுக்குழுக்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.