பொகவந்தலாவையில் அறையொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்ட 08 ஏ இலக்க தேயிலை மலைப் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர்களின் ஓய்வு அறையொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அங்கமுத்து கமலதாசன் என்பவரே நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி தேயிலை மலைப்பகுதிக்கு கொழுந்து ஏற்றச்சென்ற லொறி சாரதி, இது தொடர்பில் கெர்க்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்துக்கு அறிவித்ததை அடுத்து தோட்ட நிர்வாகத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவையில் அறையொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு (PHOTOS) | Hatton Death Body Recover

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டனர். இரவு பத்து மணிவரை வீடு திரும்பவில்லையென பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைபாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் கெர்க்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்தின் உதவி முகாமையாளரினால் உயிரிழந்தவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 

 

சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து முச்சக்கரவண்டியையும், சடலமாக மீட்கப்பட்ட நபரின் காற்சட்டை பையில் இருந்து 3140 ரூபாய் பணம், கையடக்க தொலைபேசி என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்து, ஹட்டனிலிருந்து தடவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு, சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டதையடுத்து, சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

இச்சம்பவம் தொடர்பில் உதவி முகாமையாளர் உட்பட நான்கு பேரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்த சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார், ஹட்டன் தடவியல் பொலிஸாருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.