தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்து போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி தீர்மானம்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியன சேர்ந்து போட்டியிடுவதா அல்லது தனித்தனியாகப் போட்டியிடுவதா என்பது குறித்து அந்தந்தக் கட்சிகளே தீர்மானம் எடுக்கும் என்றும் முடிவாகியுள்ளது.
கொழும்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் இந்தத் தீர்மானம் வெளியிடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் சார்பில் தலைவர் மாவை சேனாதிராசா,எம்.ஏ. சுமந்திரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்றி மகேந்திரன், புளொட் சார்பில் ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டமைப்புக்கு வெளியிலுள்ள தமிழ்க் கட்சிகளை இணைத்துக் கொண்டு போட்டியிடுவதா என்பன தொடர்பில் பேசப்பட்டது.
கடந்த தேர்தலை எதிர்கொண்டதைப் போல எதிர்கொள்ளலாம் என ரெலோ கூறியுள்ளது.
எனினும், கடந்த முறை தமக்கு உறுதியளிக்கப்பட்ட சபைகள் வழங்கப்படாததால் அது பற்றி மீளப் பேசப்பட வேண்டுமென புளொட் தெரிவித்துள்ளது.
எனினும், தேர்தல் நெருங்கிவிட்டதால், அதைபற்றி பேச அவகாசமில்லையென தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
இறுதியில், தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியன இணைந்தா அல்லது தனித்தனியாகவா போட்டியிடுவது என்பது அவர்களே தீர்மானிப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது இலங்கைத் தமிழரசுக் கட்சி அதில் அங்கம் வகிக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியே இடம்பெற்றிருந்தது. பின்னர் 2004 ஆம் ஆண்டே இலங்கை தமிழரசுக் கட்சியையும் கூட்டமைப்பில் உள்வாங்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.