திறமையான பணியாளர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு!

இலங்கையின் திறமையான பணியாளர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இணங்கியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுடன் விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் திறமையான பணியாளர்களை உருவாக்கும் வகையில், பயிற்சி நிறுவனத்தை நிறுவி, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சி மையம், ஜப்பானில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் அந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது சந்திக்க வேண்டிய அறிவு திறன்கள் மற்றும் மொழி திறன்கள் பற்றிய புரிதலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் பாரிய நீர்த்தேக்கமொன்றை நிர்மாணிப்பதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு ஜப்பானிய பிரதிநிதிகளிடம் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேவையான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்காலத்தில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜப்பானில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு இலங்கையில் பயிற்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை வழங்க முடியும் என விளையாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே. மகேசன், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் சந்தன ஜயலால், தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.