கைது செய்யப்பட்ட நபரின் மரணம் தொடர்பில் விசேட விசாரணை!

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மரணம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்தமை தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி மாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் சுமார் 15 கிராம் ஹெரோயினுடன் ஒருவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் போது அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைக் கட்டுப்படுத்தச் சென்ற போது ஏற்பட்ட சம்பவத்தினால், சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உதவி முகாமையாளரான 41 வயதுடைய ஹிக்கடுவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சந்தேக நபரின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்