மின் கட்டண திருத்தத்துக்கு எதிர்ப்பு – அமைச்சரவை செயலாளருக்கு ஜனக்க கடிதம்

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டண திருத்தத்தை எதிர்ப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அமைச்சரவை செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, 2009 ஆம் ஆண்டு மின்சார சட்டத்தின் பிரகாரம் காரணங்களை முன்வைத்து எழுத்துமூலம் இந்த முடிவை அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

முன்னதாக ஜனவரி 9 ஆம் திகதியன்று, மின்சாரத் துறைக்கான பொதுக் கொள்கை வழிகாட்டுதல்களைத் திருத்துவதற்கும், ஜனவரி 2023 முதல் நடைமுறைப்படுத்தப்படும் செலவை ஈடுசெய்யும் வகையில் மின்சாரக் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

அதன்படி, பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த கட்டண திருத்தத்தை மீளாய்வு செய்யப்பட திட்டமிடப்பட்டது.

அதேநேரம், கட்டணச் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொருத்தமான முன்மொழிவு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டதன் பின்னர் இந்தவிடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றும் நாளையும் 2 மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதி இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பகலில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின் துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.