தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே!! – ரெலோவுக்குச் சி.வி.கே. பதிலடி

“ஊடக அறிக்கை மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனக் கூற முடியாது. சம்பந்தனே கூட்டமைப்பின் தலைவராகத் தற்போதும் பதவி வவிக்கின்றார்.”

– இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த சில நாட்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் செயற்பாடுகள் தொடர்பான வேறுபட்ட கருத்துக்கள் ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்துள்ளன.

அவை பற்றி விமர்சனம் செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஆனால், இருந்தாலும் கூட நேற்றைய தினம் ரெலோவின் பேச்சாளர் எனச் சொல்லப்படுபவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் சம்பந்தன் தற்போது இல்லை எனவும், அந்தப் பதவி செயலற்றுப் போய்விட்டது எனவும், சம்பந்தனின் தலைவர் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனவும் ஊடகங்கள் முன்னிலையில் கூறியுள்ளார்.

கூட்டமைப்பிலிருந்து பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சி இன்னமும் வெளியேறவில்லை. ஆனால், கூட்டமைப்பில் பங்காளிக் கட்சிகளாக இருந்த இரண்டு கட்சிகள் (ரெலோ, புளொட்) கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிய கூட்டணியை அமைத்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் (ரெலோ, புளொட்) காலகாலமாகக் கூட்டமைப்புடன் உரசப்பட்டுக் கொண்டிருந்தன. தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி அந்த இரண்டு கட்சியினரும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டார்கள். அது அவர்களுடைய உரிமை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் சம்பந்தனே தற்போதும் பதவி வகிக்கின்றார். அதுதான் உண்மை. ஊடக அறிக்கை மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனக் கூற முடியாது.

விரும்பினால் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி அவரைப் பதவியிலிருந்து நீக்கலாம் அல்லது அவர் விரும்பினால் தாமாகவே பதவியிலிருந்து விலகலாம். அதைவிடுத்துக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனச் சொல்வது நீண்ட வரலாற்றைக் கொண்டு ஒரு தலைவரை அவமதிக்கின்ற ஒரு கூற்றாகும். அதை நான் கடுமையாக ஆட்சேபிக்கின்றேன்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.