பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

கித்துல்கல பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உலகப் பிரசித்தி பெற்ற வைட் வோடர் ராப்டிங் (white water Rafting) நீர் விளையாட்டில் பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, சாத்தியமான தீர்வுகளைப் பரிந்துரை செய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் கித்துல்கல வைட் வோடர் ராப்டிங் விளையாட்டு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்படி பணிப்புரையை வழங்கினார்.

சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்படவுள்ள இக்குழுவானது, குறிப்பிட்ட விடயம் தொடர்பில் கள விசாரணை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் அதற்கான அறிக்கையை சமர்பிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதியின் செயலாளர் இக்கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார்.

கித்துல்கலவை அண்மித்த பகுதியில் நடத்தப்படும் வைட் வோடர் ராப்டிங் விளையாட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

பிரோட்லண்ட் நீர்மின் திட்டம் காரணமாக கித்துல்கல வைட் வோடர் ராப்டிங் விளையாட்டு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதனுடன் தொடர்புடைய சேவைகளை வழங்கும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன்காரணமாக தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் மேற்படி மக்கள், நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய இந்த விளையாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரோட்லண்ட் நீர்மின் திட்டப் பணிப்பாளர், தற்போதுள்ள தொழில்நுட்ப ஏற்பாடுகளுக்கு அமைய கித்துல்கல வைட் வோடர் ராப்டிங் சேவை வழங்குநர்களுடன் ஒத்துழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

எனினும் அதனுடன் தொடர்புபட்ட சேவைகளை வழங்கும் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதியின் செயலாளர், கூடிய விரைவில் அதற்கான தீர்வுகளை வழங்குமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மகேசன், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் யு.டி.சி. ஜயலால் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை மின்சார சபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை உள்ளிட்ட துறை சார் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்