போரில் பட்ட காயத்தின் வலியை விட அதிக வலியை சமூகம் இன்று எமக்கு கொடுக்கிறது-போராளிகள் நலன்புரிச்சங்க தலைவர்.

சாவகச்சேரி
விடுதலைப் போராட்டத்தில் நாம் காயப்பட்ட போது உணர்ந்த வலியை விட அதிகமான வலியை இன்று சமூகம் எமக்கு கொடுக்கிறது என போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் “இனத்திற்காக உழைத்தவரை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப்பொருளில் சாவகச்சேரியில் இடம்பெற்ற போராளிகள் நலன்புரிச்சங்க கூட்டத்தில் தலைமையுரை ஆற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
விடுதலைப் போராட்டம் நிறைவடைந்து இன்று 12வருடங்களாக சமூகத்தில் நாம் நாமாக வாழ்ந்து வருகிறோம்.
போராட்டம் நிறைவடைந்த பின் எங்களை மன ரீதியாக நோகடிக்கும் செயற்பாடு எம் கண் முன்னே இடம்பெறுகின்றது.
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்தவர்கள் போராளிகள்.
இன்று எமது கலந்துரையாடலில் பங்குபற்ற பல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தோம் ஆனால் பாதுகாப்பு பிரச்சனையை காரணம் காட்டி பலரும் எமது அழைப்பை தட்டிக் கழித்தனர்.
வலிகளை ஆழமாக சுமந்த நாம் சமூகத்தில் நாமாக வாழும் போது அந்த வலி மீளக் கொண்டுவரப்படுகிறது.
விடுதலைப் போராட்டம் நிறைவுக்கு வந்த பின் சமூகத்தில் எம்மை புறந்தள்ளினார்கள்,விமர்சித்தனர்,அகற்றிக் கூட வைத்தனர்.
அந்த நிலையில் தான் நாம் எமக்கான இடத்தை தேட வேண்டியவர்களாக இருந்தோம்.அதன் முதற்கட்ட செயற்பாடு தான் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் உருவாக்கம்.
இந்த நலன்புரிச் சங்கம் ஊடாக நிதியைப் புரட்டி இனத்திற்காக உழைத்தவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய தேவை உள்ளது.
எமது முயற்சிக்கு சமூகம் உறுதுணையாக இருக்க வேண்டும்.
முதற்கட்டமாக தென்மராட்சிப் பிரதேசத்தில் தும்புத் தொழிற்சாலை ஒன்றை நிறுவி அதனூடாக சமூகத்தில் வறுமை நிலையில் உள்ள போராளிகளை முன்னுக்கு கொண்டு வரத் தீர்மானித்துள்ளோம்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்