தடையற்ற சுகாதார சேவைக்கு கனேடிய உறவுகள்  நிதியுதவி.

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஆளுகைக்குட்பட்ட, வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலை மற்றும் முழங்காவில் ஆதார வைத்தியசாலை என்பவற்றின் பயன்பாட்டிலுள்ள இரு நோயாளர்காவு வண்டிகளுக்குமான ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான ரயர்கள், மொன்றியல், கனடாவைச் சேர்ந்த Furits Haby நிறுவனத்தின் உரிமையாளர் திரு.சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்களது நிதிப்பங்களிப்பில் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

அவசர மருத்துவ தேவைகளை நிறைவேற்ற முடியாது கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை நிவர்த்திசெய்ய உதவுமாறு, கிளிநொச்சி மாவட்ட மருத்துவர் சங்கத்தினரால், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் எழுத்துமூல கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அக்கோரிக்கையை, பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மனிதாபிமானப் பணியாளரான Furits Haby நிறுவன உரிமையாளர் திரு.சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்களின் கவனத்துக்குக் கொண்டுசென்றதற்கமையவே, ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான மேற்படி ரயர்கள் கிளிநொச்சி மாவட்ட மருத்துவர் சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2023.01.24 ஆம் திகதி, கிளிநொச்சி மாவட்ட மருத்துவர் சங்கத்தின் ஏற்பாட்டில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்குமாகாண மேனாள் கல்வி அமைச்சர் திரு.தம்பிராசா குருகுலராசா, நிதியுதவியாளரது உறவினர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவர் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.