நீதிப்பொறிமுறை தெரியாத நீதி அமைச்சரே சிறிலங்காவில்- செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு!

நாட்டின் நீதி அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய நீதிப் பொறிமுறைகளை அறியாதவராக இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

“வெளி நாட்டிலிருந்து வந்த பிரதிநிதி ஒருவருக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நன்றாக கதை அளந்து இருக்கின்றார். நேற்றைய அரச ஊடகப் பத்திரிகையில் இதை கண்ணுற்றது வேடிக்கையாக இருந்தது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்குத் தடையாக ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் இருப்பதாகவும், அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமையால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாமல் இருப்பதாக கூறியிருப்பது விசமத்தனமானதும் சிறு பிள்ளைத்தனமானதும்.

நாட்டின் நீதி அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய நீதி பொறிமுறைகளை அறியாதவராக இருக்கிறாரா என்ற கேள்வி எழுகின்றது. அதிபரின் பொது மன்னிப்பின் பேரில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட முடியும் என்பதை பட்டியலிட்டு ஆதாரத்தோடு அதிபரிடம் கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற சந்திப்பிலே நாங்கள் கை அளித்திருந்தோம்.

அதன் பிரகாரம் 13 அரசியல் கைதிகள் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதன் அடிப்படையில் மற்ற அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்ய முடியும் என்பதை அரசியல் யாப்பு தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் மாத்திரம் வழக்கை மீள பெற்ற பின்னர் விடுதலை செய்ய முடியும் என்பதையும் சட்டம் சொல்கின்றது.

இது இப்படி இருக்க சிறுபிள்ளைத்தனமான ஒரு புதுக் கதையை நீதி அமைச்சர் அளந்து இருப்பதானது அரசியல் கைதிகள் விடுதலையில் அதிபரின் அதிகாரங்கள் பற்றிய சட்ட விவகாரங்களை அவர் அறிந்திருக்கவில்லையோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது. இதுவரை காலமும் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் யாருடைய ஒப்புதலின் பேரில் அதுவும் எந்த தமிழ் அரசியல்வாதிகளின் ஒப்புதல் பேரில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர் விளக்குவாரா?

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைக்கு நாட்டின் நீதி அமைச்சர் என்ற முறையிலே விஜயதாச ராஜபக்ச வழங்கிய பதில் அந்தக் கோரிக்கையை எள்ளி நகையாடி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நீதி அமைச்சராக தன்னுடைய கடமையை சரியான முறையில் அவர் செயல்படுத்த வேண்டுமே தவிர சிறுபிள்ளைத்தனமான சாட்டுப்போக்குகளைச் சொல்லி தனது கடமைகளை தவிர்த்துக் கொள்வதை அல்லது சட்டத்திலே இருக்கக்கூடிய ஏற்பாடுகளை மூடி மறைப்பதை நாங்கள் கவலையோடு உற்று நோக்குகிறோம்.

அவருடைய இந்த கருத்தானது ஒட்டுமொத்த நாட்டினுடைய நீதிப் பொறிமுறையின் செயல்பாடு எந்த அளவிற்கு சிறுமைப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டி உள்ளது”என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.