தமிழ் இனத்தை விற்பதற்கு போட்டி போடுகிறார்கள் – தமிழ் கட்சிகளை குற்றம் சுமத்தும் கஜேந்திரகுமார்

கொள்கை என்ற பெயரில் இந்தியாவிற்கு விசுவாசமாக நின்று இனத்தை விற்பதே தமிழ் கட்சிகளிடையேயான போட்டி என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மேலும் ”ரெலோ, புளொட், ‘ஈபிஆர்எல்எப்” ஆகியன இந்தியாவின் முகவர்கள் என்றும் இதன்போது விமர்சித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம்செய்த அவர் தேர்தல் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

”இது ஒரு உள்ளூராட்சி தேர்தலாக இருந்தாலும் இந்த சூழலை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். போர் முடிவடைந்து 14வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் பொருளாதார ரீதீயாகவோ அரசியல் ரீதியாகவோ எந்தவிதமான முன்னேற்றமும் தமிழ்மக்களிற்கு கிடைக்கவில்லை.

போர்குற்றத்திற்கும் தீர்வுகிடைக்கவில்லை. எமது விடயங்கள் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட தரப்பான நாங்கள் முன்னேற்றமடையாமலே இருக்கிறோம்.

பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு கொடூரமான சட்டமாக சொன்னாலும், அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் சிங்களமக்கள் விடுவிக்கப்படுகின்றார்களே தவிர தமிழ்மக்கள் தொடர்ச்சியாக சிறைகளிலேயே வாடுகின்றனர்.

அத்துடன் இன்று அனைவராலும் பேசப்படும் 13 ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் இருக்கின்ற ஓர் கட்டமைப்பு. ஒற்றையாட்சி என்பது சிங்கள பௌத்த ஆட்சி. வேறு எவருக்கும் அங்கு அதிகாரம் இல்லை.

அதனாலேயே தமிழ் பெருந்தலைவர்கள் நீண்டகாலமாக இதனை நிராகரித்துவந்திருக்கின்றார்கள். விடுதலைபுலிகள் கூட அதனை ஏற்றுகொள்ளவில்லை. எங்களால் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் இந்த படுமோசமான ஏமாற்றுவேலைக்கு விலைபோனமையினாலேயே இந்த திருத்தம் பற்றி பலரும் இன்று பேசுகின்றார்கள்.

அதுவே உண்மை. இதனை நாம் எவ்வாறு மாற்றப்போகின்றோம். இந்த தேர்தல் ஊடாகமக்கள் தமது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தவேண்டும். போர்முடிவடைந்து 14 வருடங்களாக தமிழர்கள் துன்பப்படுகின்றார்கள் எனில் அதில் தவறு உள்ளது.

அதனை நிவர்த்தி செய்வதற்கு உங்கள் கையில் இருப்பது வாக்குமாத்திரமே. எனவே இத்தனை வருடங்களாக உங்களை ஏமாற்றிய அதே தரப்பிற்கே வழங்கப்போகின்றீர்கள் என்றால் நீங்கள் அதற்கு இணங்குகின்றீர்கள் என்றே உலகம் நோக்கும்.

இதில் மாற்றத்தை ஏற்ப்படுத்துவதற்காக கடந்த 14வருடங்களாக தமிழ்தேசிய மக்கள் முண்ணனி மக்களிடத்தில தெளிவை ஏற்ப்படுத்தி வருகின்றோம். நாம் சொன்ன ஒவ்வொன்றும் இன்று உங்கள் கண்முன்னே நிரூபிக்கப்பட்டுவருகின்றது.

மக்கள் எங்களை நிராகரித்தார்கள் ஆனால் நாம் மீண்டும் மக்களிடத்திலே வந்தோம். இன்று எம்மைத்தவிர அனைத்து தரப்புக்களும் 13 வது திருத்தத்தை ஏற்கும் நிலையிலேயே உள்ளது. நாம் மாத்திரமே கொள்கை அளவில் மறுத்துநிற்கின்றோம்.

விக்கினேஸ்வரன் தனக்கு செயலாளர் பதவிதரவில்லை என்று பிரிகின்றார். ரெலோ,புளட், ஈபிஆர்எல்எப் ஆகிய இந்தியாவின் முகவர் அமைப்புக்களின் உறுப்பினர்களும் தங்களுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்று பிரிகின்றார்கள், இவர்கள் பிரிந்து நிற்பதற்கு காரணம் கொள்கையல்ல பதவி.

அனைவரும் கொள்கை என்ற பெயரில் இனத்தை விற்பதற்கு தயாராகியுள்ளனர். யார் இந்தியாவிற்கு அதிகமாக விசுவாசமாக நின்று இனத்தை விற்கலாம் என்பதே அவர்களிற்கிடையிலான போட்டி. அதற்காவே பிரிந்துநிற்கின்றார்கள்.

இவை அனைத்தும் தெரிந்தும் எம்மை ஆதரிக்காமல் பிரிந்து நின்று ஒற்றையாட்சிக்குள் முடங்கிப்போயுள்ள தரப்புகளிற்கு வாக்குகளை வழங்கினால் இந்த தேர்தலுக்கு பின்னரான தமிழர் அரசியல் உரிமை பயணம் முடிவிற்கே வரும்.

எமது அரசியலும் ஒற்றையாட்சிக்குள் நிரந்தராமாக முடிங்கிப்போகும். எனவே மக்களாகிய நீங்களே முடிவெடுங்கள்.” என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.