மக்களின் காலடிக்குச் சென்று சேவை செய்ய வேண்டும்- சஜித் பிரேமதாஸ

தற்போதுள்ள உள்ளூராட்சி மன்ற நடைமுறையை மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்களையும், முன்மொழிவுகளையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் போது, ​எந்த வேலையும் செய்யாமல் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தம்பட்டம் அடிக்கும் சில அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்கள் மூலம் சேறுபூசுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சேறுபூசினாலும் நாட்டில் நிதியில்லாத போதும் இல்லை, இயலாது, முடியாது என சொல்லாமல் மக்களுக்கு சேவை செய்யவே குறித்த வேலைத்திட்டங்கள் சகலதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ரத்தோட்டையில் இன்று (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

தேர்தலுக்குப் பிறகு, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களின் காலடிக்குச் சென்று சேவை செய்ய வேண்டும் என்று தான் கூறும் போது, சமூக ஊடகங்கள் மூலம் ஒரு சிலர் கேலி செய்வதாகவும், 2019 ஜனாதிபதித் தேர்தலின் போதும் தான் இதையே கூறிய சமயத்தில், அப்போதும் தன்னை கேலி செய்ததாகவும், அந்த கேலித்தனத்தின் விளைவை நாடு தற்போது அனுபவித்து வருவதாகவும், நாடு வங்குரோத்தாகி விட்டதாகவும், மக்கள் மிகவும் அநாதரவாகி விட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட தவிசாளர்,உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் மக்களிடம் சென்று அவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து சிறந்த சேவையை வழங்குவதே உத்தேச நடமாடும் சேவையின் நோக்கமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பிரச்சினைகளை அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்குள்ளையே தீர்க்கும் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தரவு மற்றும் விடய ஆய்வு அடிப்படையில் பிரச்சினைகளைத் தீர்க்கும் வேலைத்திட்டமொன்று எந்தவொரு கட்சியிடமும் அரசாங்கத்திடமும் கூட இல்லாதபோது ஐக்கிய மக்கள் சக்தி அத்தகைய எண்ணக்கருவை செயல்படுத்துவதாகவும், இவ்வாறான மக்கள் நலத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது சில விடயங்களை பொய்யாக்கி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் விரும்பும் வார்த்தைகளுக்கு பின்னால் செல்ல ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டை நாசமாக்கிய கும்பல் தற்போது ஒன்று சேர்ந்துள்ளதாகவும், அவ்வப்போது முட்டுக்கொடுக்கும் தரப்பு, தாங்கள் தான் இதற்கு ஒரே தீர்வு என கூறுவதாகவும், இந்நாட்டிற்கு ஒரே தீர்வு எந்த அரசியல் கட்சிக்கு நிதி தேடும் தலைமையும் அணியும் உள்ளது? என்பதை மக்கள் இந்நேரத்தில் சரியாக சிந்தித்து சரியான முடிவை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதன் பின்னர் இந்நாட்டில் கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்தி யுகம் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் சார் ஆட்சியொன்று முன்னெடுக்கப்படும் எனவும், இதற்கு புத்திசாலி மிக்க வாக்காளர்களின் ஆதரவு தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.