காணி விடுவிப்பு நிகழ்வைப் புறக்கணிக்கும் விக்கி!

யாழ்., வலிகாமம் வடக்கில் இன்று 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் நிகழ்வைத்தான் புறக்கணிக்கின்றார் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

”மிகத் தாமதமாக மிகச் சொற்பமாக” காணிகள் விடுவிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் நிகழ்வைப் புறக்கணிக்கின்றார் என்று ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் இ.இளங்கோவனுக்கு அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“யாழ். குடாநாட்டில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் படையினர் வசம் இருக்கும் நிலையில் விடுவிக்கப்படுகின்ற காணிகள் புறக்கணிக்கத்தக்க அளவிலானவை. வடக்கு மாகாணம் முழுவதும் 60 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளை அரச படைகள் ஆக்கிரமித்துள்ளன. அவற்றில் எவையும் விடுவிக்கப்படவில்லை.

ரயில் பாதைகள், கட்டுமானங்கள் அமைப்பதற்காக தமக்கு வேறு காணிகள் எதுவும் தேவையில்லை என்று இந்திய அரசு எனக்கு முன்னர் தெரிவித்திருந்தது. அப்படிப் பார்க்கும்போது பலாலியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக மட்டுமே அங்கு நிலையெடுத்துள்ளனர். அப்படி விமான நிலையப் பாதுகாப்புக்குத் தேவையானது தவிர பல மடங்கு காணிகளை அவர்கள் ஆக்கிரமித்து வைத்திருப்பது எதற்காக?

மிகப் பெரும் தொகை ஏக்கர்கள் விடுவிக்கப்படவேண்டியிருக்கும்போது ஒரு சிறு துண்டுக் காணிகளை விடுவிப்பது வெறும் கண்துடைப்பு.

எப்படியிருப்பினும் இந்த மிகத் தாமதமான மிகச் சொற்பமான காணி விடுவிப்பை நான் வரவேற்கின்றேன். மக்களின் எஞ்சிய காணிகளும் விடுவிக்கப்படுமாயின் அதற்கு என்னால் முடிந்த வகைகளில் ஒத்துழைப்பேன். அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அதில் நான் பங்கேற்பேன் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.

இந்தக் காரணங்களுக்காகவே என்னுடைய எதிர்ப்பு நடவடிக்கையாக இன்றைய நிகழ்வை நான் தவிர்க்கின்றேன்” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்