ஒட்டாவாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் விழா 2023

ஒட்டாவா தமிழ் ஒன்றியம் ஒருங்கமைத்து நடாத்திய தமிழ் மரபுத் திங்கள் விழா தை 29 2023 அன்று ஒட்டாவா St. Elias  மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஈழத்தழிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்ட  இன அழிப்பு நடவடிக்கைகளுக்கான நிரந்தர நீதியை பெற்றுக்கொடுக்கும் பாதையில், பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச   நீதிக்கான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மனித உரிமை சார் குற்றவாளிகளாக அறியப்பட்ட  இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் இரு இராணுவ அதிகாரிகள் மீது சில தடை உத்தரவுகளை அண்மையில் கனடா அரசாங்கம் விதித்திருந்தமைக்கும், தமிழ்சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக குரல்கொடுக்கும் மிக முக்கியமான பயணத்தில் தன் மக்களுடன் கைகோர்த்து உலக அரங்கில் கனடா நடந்துகொள்ளும் பாங்குக்கும் நன்றி பாராட்டும் நிகழ்வாக இந்த முறை மரபுத்திங்கள் விழா கட்டமைக்கப்பட்டிருந்தது.  250 க்கும் அதிகமானோர் கலந்து சிறப்பித்தனர். இம்முறையும் Toronto, Montreal, cornwall  நகரங்களில் இருந்து அதிகமான தமிழர்கள்  கலந்து கொண்ட இந் நிகழ்வில் பழந்தமிழர் பாரம்பரியத்தை பேணும் வண்ணம் இயல் மற்றும் இசை நிகழ்வுகள்  இடம்பெற்றது.

நிகழ்வரங்கின் முகப்பில் தமிழ் மரபை பறைசாற்றும் இசைக்கருவிகள், பாரம்பரிய அடையாளங்கள், இலக்கியப் படைப்புகள்  ஆங்கில விளக்கங்களுடன் கண்காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை மரபுத்திங்களின் அடிப்படைகளை அழகுற நிகழ்வில் கலந்துகொண்ட பல்லின மக்களுக்கு பறைசாற்றியது.

கனடிய பூர்விக மண்ணின் ஆசீர்வாதம், கனடியத் தேசிய கீதம், தமிழ்மொழி வாழ்த்து மற்றும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்புப் போரில் உயிரிழந்தவர்களுக்கும், கனடாவின் சார்பாக போர்க்களங்களில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும் அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

மங்கள விளக்கேற்றல் அனைத்துக்கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் சமூகத் பிரதிநிகள் பங்குபற்றினர். தலைவரின் வரவேற்புரையை தொடர்ந்து

மறைந்த கனேடிய காவல்துறை உத்தியோகத்தரும்  முன்னாள் ராணுவ வீரருமான திரு விஜயாலயன் அவர்கள் நினைவு  கூரப்பட்டார். இவரது பல்துறை ஆளுமைக்காகவும், இளம்வயதில் ஆற்றிய பல சேவைகளுக்காகவும் கனேடிய     தமிழ் சமூகம் மட்டுமன்றி பல கனேடிய இளையர்கள் மத்தியில்  நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனேடிய பாராளுமன்றின் அனைத்து கட்சிகளையும் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒன்றாரியோ மாகாணசபை உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கனடிய பாராளுமன்ற

Nepean பிராந்தியத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் Anitha Vandenbeld  கனேடிய பிரதமர் கௌரவ.Justin trudeau அவர்களின்செய்தியை நிகழ்வில் பகிர்ந்து கொண்டார். Ottawa Center பாராளுமன்ற உறுப்பினர் Yasir Naqvi அவர்களும் உடனிருந்தார்.  Scarborough—Rouge Park பாராளுமன்ற உறுப்பினர் MP Gary anandasangaree அவர்கள் நிகழ்வில் அண்மைய சிறிலங்கா அரசு முன்னாள் அதிபர்கள் மீதான தடை  நீதிக்கான பயணத்தின் முதல் படி எனவும் மேலும் செயல்பாடுகள் தேவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

கனேடிய எதிர்க்கட்சி தலைவர் கௌரவ Pierre Poilievre இனது  செய்தியினை பாராளுமன்ற உறுப்பினர்கள் Anna Roberts – King-Vaghan, Dan Muys – Flamborough—Glanbrook அவர்கள் நிகழ்வில் பகிர்ந்துகொண்டார்.

கனேடிய NDP கட்சி தலைவர் கௌரவ Jagmeet Singh இனது  செய்தியினை Burnaby, British Columbia பாராளுமன்ற உறுப்பினர் Peter Julian அவர்கள் நிகழ்வில் பகிர்ந்துகொண்டார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இன அழிப்பு  விடயத்தில் கனடா காத்திரமான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என நிகழ்வில் உரையாற்றிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏகோபித்த உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்தது நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து தமிழ் சமூகத்தினருக்கும் நம்பிக்கை ஊட்டியது.

நிகழ்வின் முத்தாய்ப்பாய் இங்கிலாந்தில் இருந்து வந்து கலந்துகொண்டிருந்த சிறப்புப் பேச்சாளர் திரு. Lorenzo Fiorito அவர்களது உரை அமைந்திருந்தது. கனேடிய-இத்தாலிய தந்தைக்கும் இலங்கையின் மலையகத்தை சேர்ந்த தமிழ்த்தாய்க்கும் பிறந்த மகனான திரு Lorenzo Fiorito அவர்கள் 2009இல் தமிழர்களுக்கு நடந்த அநீதிகளை கண்டு வெம்பி தமிழ்மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கும் பாதையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பயணிக்கும் சர்வதேச சட்டப்புலமைமிக்க ஒரு ஆளுமை.

ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க இன்றைய கனடா அரசு எடுத்துவரும் செயற்பாடுகளை வெகுவாக பாராட்டினார். அதேவேளை

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பானது பல  அடக்குமுறை வடிவங்களாக பல்லாண்டு காலமாக நடைபெறுவதை உதாரணங்களுடன் விளக்கிய அவர் ஒடுக்கப்படும் ஒரு தேசம் தனக்கான இருப்பை உறுதிசெய்வதற்கான போராட்டத்தின் நியாயத்தை சர்வதேச சட்டங்களில், ஒப்பந்தங்களில் உள்ள  ஏற்பாடுகளை உதாரணங்காட்டி மிகத்தெளிவாக சபையோருக்கு விளக்கமளித்தார்.

இன அழிப்பில்  இருந்து தன் சமூகத்தையும் தேசத்தையும் பாதுகாப்பதற்காக  ஒரு போராட்டத்தை நடாத்திக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளை நோர்வே அரசின் அனுசரணையில்  சமாதான பேச்சு நடைபெற்று வந்த காலப்பகுதியிலேயே தடை செய்வதாக  தமிழர்கள் சற்றும் எதிர்பாராத ஒரு முடிவை கனடா எடுத்திருந்தது. அன்றைய சர்வதேச களச்சூழலில் ஏனைய சில அமைப்புகளை தடைசெய்யவேண்டிய பட்டியலில் விடுதலைப்புலிகள் அமைப்பும் உள்வாங்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை விவகாரத்தில் விளைவுகள் சற்றும் எதிர்பாராமல் மிக மோசமாக அமைந்துவிட்டது. இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனும் பொருள்பட உலக நியமங்களை ஒதுக்கிய செயல்பாடுகளின் பக்க விளைவாக கனடாவின் தடை முடிவு மேற்படி சர்வதேச நியதிகளின் படி தவறாக இருந்துவிட்டது என்பதையும், 2001 இல் இலங்கை அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் படைவலுச்சமநிலையில் இருந்த காலத்தில் நோர்வையின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுகள் நடந்துகொண்டிருந்த காலத்தில் கனடா எடுத்த மேற்படி தடை முடிவின் சில நாட்களிலேயே  இலங்கை அரசாங்கம் மீண்டும் இன அழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்ததோடு   உலக அரங்கில் அதை தனக்கேற்றாற்போல் நியாயப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதையையும் திறந்துவிட்டது.

அதன் தொடர்ச்சியாகவே 2009 இல் எந்த மனிதாபிமானம் உள்ள மனிதனாலும் ஜீரணிக்கமுடியாத மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுடன் கூடிய மிகப்பெரிய இன அழிப்பு நடந்தேறியது. இன்றுவரை அதற்கான எந்த நீதியும் நிலைநாட்டப்படவில்லை. இவ்வாறான இன அழிப்பை, பேரவலத்தை இலங்கை அரசாங்கம், தமிழர்களுக்கு ஏற்படுத்தும் என கனடா உட்பட பலநாடுகள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. என்று இந்த அவலங்களை சர்வதேசம் காணமுடிந்ததோ அன்றுமுதல் இந்த இன ஆழிப்புக்கான பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை கனடா மிக உறுதியாக கொடுத்துவருகிறது. அண்மைய தடை கூட அவ்வாறான ஒன்றே! இருப்பினும்  ஒருவகையில் தார்மீக பொறுப்புகூறவேண்டிய நிலையில் கனடாவும் உள்ளதால்  ஈழத்தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ளும் பாதையில் கனடா முன்னர் செய்ய தவறை திருத்திக்கொண்டு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது மிக முக்கியமானது என திரு Lorenzo Fiorito  அவர்கள் தனது உரையில் பல்வேறு உதாரணங்களை முன்னிறுத்தி அதன் தேவையையும் விளக்கி ஒரு கனேடிய தமிழ்க் குடிமகனாக கனேடிய அரசாங்கத்திடம்  தன் நீண்ட விளக்கமான சிறப்புரை மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

நிகழ்வின் இன்னொரு சிறப்பு அம்சமாக, ஈழத்தமிழர்களுக்கான நீதிக்காக தொடர்ந்து பலகாலமாக செயற்பாட்டாளராக இயங்கிவரும் திரு யோகேந்திரன் வைசீகமபதி   அவரது பல ஆண்டுகால சீரிய மனிதவுரிமை மற்றும்  தமிழ்த்தேசிய பணிகளுக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தனர். பேச்சாளர்கள் அனைவரும் கனடாவின் வளர்ச்சியில் கனடியதமிழர்களின் காத்திரமான பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

நிகழ்வின் மேலும் ஒரு சிறப்பம்சமாக ரொரண்டோ மற்றும் மொன்றியல், போன்ற நகரங்களில் இயங்கி வரும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெருமளவில் பங்கேற்றனர். Montreal போன்ற நகரங்களில் இருந்து வந்த சிறந்த கலைநிகழ்வுகளும் இந்த நிகழ்வில் மேடையேற்றம் கண்டது.

தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என மூன்று மொழிகளிலும் மூன்று தொகுப்பாளினிகள் தொகுத்து வழங்க பல்வேறு கலைநிகழ்சிகள் அரங்கேறின.  சிறுமி ஒருவர் வழங்கிய பாம்பு நடனம் பல ரசிகர்களின் கரவோலிகளை பெற்றது.

தேனிசை செல்லப்பாவின் வரிகளில் உதித்த யாகம் தொடங்கிவிட்டோம் பாடலுக்கு உணர்ச்சிகர நடனமாடினார்கள் இளையர்கள்!

தற்பாதுக்காப்பு கலைவடிவங்களை நடனமாக்கி உருவாக்கப்பட்டிருந்த ஒரு குழுநடனப் படைப்பு வித்தியாசமாக தமிழர் பாரம்பரிய தற்பாதுகாப்பு கலைகளை மேடையேற்றி கரவோலிகளை தட்டிச்சென்றது.

ஒட்டாவா கால்ரன் பல்கலைக்கழக மாணவர்களும் நடன நிகழ்ச்சியை வழங்கியிருந்தார்கள்! மொன்றியல், ரொரண்ரோ பகுதிகளின் புகழ்பூத்த நடனக் குழுக்களின் படைப்புகளும் பார்வையாளர்களை மகிழ்வித்திருந்தது.

இராப்போசனத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு கனடா முழுவதும் தை மாதம் கொண்டாடப்படும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டங்களுக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.