நாட்டை மீட்க வேண்டுமாக இருந்தால் சஜித் ஒன்றே தீர்வு! ஊடகச் சந்திப்பில் சஜித் இணைப்பாளர் வினோகாந்த் காட்டம்!

முன்னொருபோதுமில்லாத வகையில் நாடு பொருளாதார நெருக்கடியால் அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இதனை மீளக்கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இன்று இருக்கின்ற ஒரே ஒரு தீர்வு சஜித் பிரேமதாசா மாத்திரமே.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் தமிழ்ப்பிரிவு இணைப்பாளருமான வெள்ளையன் வினோகாந்த் நேற்று(12) ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று(12) ஞாயிற்றுக்கிழமை காரைதீவிலுள்ள அம்பாறை ஊடக மையத்தில் இடம்பெற்றது .

அங்கு அவர் மேலும் கூறுகையில்.

இலங்கையில் கடந்த ஆறுதசாப்த காலமாக மக்கள் வாக்களித்து வந்திருக்கின்றார்கள். ஆனால் இம்முறை முதல் தடவையாக ஐக்கிய மக்கள் சக்தி நாட்டில் சகல பாகங்களிலும் தேர்தலில் இறங்கி உள்ளது. 70 -80- 90 களில் ஜனசவிய கம்முதாவ போன்ற பல திட்டங்களை நாட்டுக்கு புகுத்தி மக்களை விமோசனப்படுத்திய அமரர் பிரேமதாச அவர்களின் புதல்வன் சஜித் பிரேமதாசா ஒரே ஒரு முதுகெலும்புள்ள தலைவராக இருக்கிறார்.

ஆளும் கட்சியில் இல்லாமலே தற்போது 70 பாடசாலைகளுக்கு 3400 லட்சம் ரூபாய் பெறுமதியான பஸ்களை வழங்கி இருக்கின்றார். 56 வைத்தியசாலைகளுக்கு 1919 இலட்ச ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 128 லட்ச ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்வளவு சேவையை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு செய்தவர் சஜித்.
இங்கு அம்பாறை மாவட்டத்திலேயே 20 உள்ளூராட்சிசபைகள் உள்ளன. ஏழு சபைகள் சிங்கள சபைகள். ஏனைய பதின்மூன்று தமிழ் முஸ்லிம் சபைகளிலே எனக்கு ஆலையடிவேம்பு காரைதீவு திருக்கோவில் ஆகிய பிரதேதேச சபைகள் பொறுப்பு அளிக்கப்பட்டு இருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயமாக இந்த சபைகளிலே வெற்றி பெறும் என்பதில் மாற்று கருத்துக்கள் இல்லை .
நாங்கள் கிராம ரீதியாக ஒவ்வொரு பிரதேசத்திலும் பல பிரச்சினைகளை இனங்கண்டு இருக்கின்றோம். அவற்றை தீர்ப்பதற்கான திட்டத்தையும் வகுத்திருக்கின்றோம். மார்ச் மாதம் ஒன்பதாம் தேதிக்கு பிற்பாடு இவை அனைத்தும் அமுலுக்கு வரும்.
இன்று பசித்தவர் தொடர்ந்து காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இன்றையதேர்தல் காலத்தில் இலவசங்கள் தொடர்பாக பலரும் வாக்குறுதி அளிப்பார்கள் .

அதற்கு அடிபணியாமல் சோரம் போகாமல் உண்மையான தலைவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் .

கடந்த 25 வருடங்களாக ரணில் பல பதவிகளை வகுத்து பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
எதனையுமே அவர் செயல்படுத்தவில்லை. அதுபோலவே நாட்டின் இனப்பிரச்சினையை அவரால் தீர்த்து வைக்க முடியாது .
தேர்தல் காலத்தில் மட்டும் இவ்வாறான சிந்தனை அவருக்கு வருவது வழமை. தேர்தல் முடிந்ததும் அவற்றை மறந்து விடுவார். அதனால் தான் நான் சொல்கிறேன் அவரால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று.

மக்களே ஏமாந்து விடாமல் எமது ஐக்கிய மக்கள் சக்தி வாக்களித்து உங்களையும் நாட்டையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்