வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை டிஜிட்டல் மயமாக்கப்படும் -அமைச்சர் மனுஷ நாணயக்கார

ஓமானில் உள்ள வேலைகளுக்கு இலங்கைப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் உள்ள நடைமுறை தாமதங்களைத் தவிர்க்கும் வகையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை டிஜிட்டல் மயமாக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்கள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.


ஓமானுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் எடுக்கப்படும் அனுமதிகளைப் பெறுவதற்கு தனிப்பட்ட முறையில் தூதரகத்துக்கு வருவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும், அதற்காக அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முகாமைகளின் தலைவர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். அதேவேளை, தூதரகத்தில் உள்ள அதிகாரிகளின் பற்றாக்குறை காரணமாக, அனுமதிகளைப் பெறுவதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றார்.

இதனிடையே, வீடியோ தொழில்நுட்பம் மூலம் ரிமோட் முறை மூலம் நேர்காணல் நடத்திய பிறகே வீட்டு வேலையாட்களை பணிக்கமர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

சுற்றுலா விசா மூலம் ஓமானில் வீட்டு வேலைக்காக பெண் தொழிலாளர்களை அழைத்து வருவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் ஓமானில் பணிக்கமர்த்தும் அமைப்புகளின் பிரதிநிதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அளிக்கக்கூடிய தீர்வுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.