உள்ளூர் மிளகாய் உற்பத்தியை 25% அதிகரிக்க நடவடிக்கை

இந்த வருடத்தில் உள்ளுர் மிளகாய் உற்பத்தியை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் (ASMP) அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பதுளை மாவட்டத்தில் மிளகாய் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது அமைச்சர் கடந்த சனிக்கிழமை (11) கும்பல்வெல பிரதேசத்தில் மிளகாய் தோட்டங்களை பார்வையிட்டார்.

உமா ஓயா திட்டத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக ஏற்பட்ட நீர்க்கசிவால் பண்டாரவளை மற்றும் கும்பல்வெல பிரதேசங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நெல் மற்றும் காய்கறி விவசாயிகள் இந்நிலையால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பயிர்ச் செய்கை நஷ்டமடைந்த விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட மிளகாய்ச் செய்கை திட்டம் இதுவரையில் வெற்றியடைந்துள்ளது.

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டமானது, வெளிநாட்டு நிதியில் விவசாய அமைச்சினால்
செயற்படுத்தப்படும் திட்டமாகும், இது விவசாயிகளுக்கு விதைகள், நீர் பாசன தொழில்நுட்பம், நவீன தொழில்நுட்ப உபகரணங்கள், பயிர்களை பூச்சியிலிருந்து பாதுகாக்கும் அறிவு மற்றும் பயிர்ச்செய்கைக்கு தேவையான பிற உபகரணங்களை இலவசமாக வழங்குகிறது.

ஒரு ஏக்கர் நிலத்தில் அரை ஏக்கர் மிளகாய் செடிகளை நட்டு விளைச்சலை அதிகரிப்பது குறித்தும், குறைந்தபட்ச பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களைப் பயன்படுத்தி மிளகாயின் தரத்தை மேம்படுத்துவது குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் மிளகாய்ச் செய்கையில் ஆர்வமுள்ள தெரிவு செய்யப்பட்ட இளைஞர் குழுக்களுக்கு மிளகாய் செய்கைக்குத் தேவையான நிதியுதவி, தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்குமாறு அமைச்சர் அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டிற்கு வருடாந்தம் தேவைப்படும் மொத்த உலர் மிளகாய் 55,000 மெட்ரிக் தொன் என்றாலும், 50,000 மெட்ரிக் தொன் இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டில் வருடாந்தம் சுமார் 5,000 மெட்ரிக் தொன் மிளகாய் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வருடம் நாட்டுக்குத் தேவையான மொத்த மிளகாய்த் தொகையில் 25 வீதத்தை உற்பத்தி செய்யுமாறு விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரெஹான் விஜேகோனுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.