நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு கூடியது

நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு ,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, இலங்கையில் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவது தொடர்பில் இந்த குழு செயற்படுகிறது.

இலங்கையின் நிர்மாணத்துறையின் பிரச்சினைகளை முறையாகத் தீர்த்து, அதற்கு புத்துயிரளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

நிர்மாணத்துறைக்கு புத்துயிரளிக்கும் குழுவின் கீழ் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள நிறைவேற்றுக் குழுவின் மூலம் நிர்மாணத்துறைக்கு புத்துயிர் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அலுவலகம், நிதியமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (SLIDA), நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளையம் தனியார் துறை பங்குதாரர்களையும் உள்ளடக்கியதாக இந்த நிறைவேற்றுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டது.

நிர்மாணத் துறையில் கண்டறியப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் வங்கி வட்டி வீதங்களை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகள், இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் சுங்க வரிகள், அரசாங்கத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான கொடுப்பனவு முறைமை போன்றன தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

நிர்மாணத்துறையில் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளை கணக்கிட்டு எவ்வளவு காலத்திற்குள் கொடுப்பனவுகளை பூர்த்தி செய்வது என்பது தொடர்பில் உடன்பாடு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நிர்மாணத்துறையில் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நிர்மாணத்துறை தொடர்பான நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.