2009இல் ஓடி ஒழிந்தவர்கள் இன்று வாக்கிற்காக வீதியில் நாடகம் போடுகின்றனர்-அங்கஜன் எம்.பி
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது அதற்கு பலம் சேர்க்காமல் ஓடி ஒழிந்தவர்கள் இன்று ஜனாதிபதி வரும் போது வாக்கிற்காக வீதியில் இறங்கி நாடகம் போடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
14/02 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
சில தினங்களுக்கு முன்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லிணக்க அடிப்படையில் சுதந்திர தினத்தை கொண்டாட யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
இன்னமும் எமது மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாதவர்களாக இருப்பதால் அந்த சுதந்திர தின நிகழ்வில் பங்குபற்ற எனது மனம் விரும்பவில்லை.
அந்த நிகழ்வில் பலரும் கலந்துகொள்ளவில்லை.
ஆனால் ஒருசிலர் அதை எதிர்ப்பதாகக் கூறி வீதியில் நாடகம் நடத்தி விட்டு சென்றிருந்தனர்.
உடைகளை கிழித்தும்-சிறையில் தொலைபேசி பாவித்தும் அவர்கள் தமது படங்களை முகநூலில் பகிர்ந்திருந்தனர்.
நான் மக்களுடைய போராட்டத்தை கொச்சப்படுத்தவில்லை.
ஆனால் இந்த அரசியல் நாடகத்தை ஏற்க முடியவில்லை.
இவ்வாறு போராடி கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்.மற்றொருவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்.
அவர்களுடைய வயதை வைத்துப் பார்க்கும் போது 2009இல் இருவருக்கும் 18வயதிற்கு மேலாக தான் இருந்திருக்கும்.
போராட்டம் பற்றி பேச முழு தகுதியும் தமக்கே இருப்பதாக கூறும் இவர்கள் 2009இறுதி யுத்த நேரத்தில் எங்கிருந்தனர்?
2009இல் யுத்தம் முடிவுக்கு வர காரணம் தலைவர் அழைத்தும் பலர் போராடச் செல்லாமை தான்.
உண்மையான கொள்கை,விசுவாசம் இருப்பவர்களானால் அன்று இந்த இருவரும் போராட்ட களத்திற்கு சென்றிருப்பார்கள்.
அன்று இவர்கள் போராட்ட சென்றிருந்தால் அந்த போராட்டத்திற்கு பலம் சேர்த்திருக்க முடியும்.
ஆனால் 2009இல் ஓடி ஒழிந்தவர்கள் இன்று அரசியல் நாடகம் போட்டு இளைஞர்களை உசுப்பேற்றி சிறைக்கு செல்ல வைப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவர்களை அரசியல் வியாபாரிகள் என்றே கூற முடியும்.இந்த நாடகங்களை தான் 70வருடங்களாக செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.












கருத்துக்களேதுமில்லை