திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் மரக்கறி கடை உரிமையாளரின் டியோ ரக ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் கடந்த செவ்வாய்க்கிழமை(7) அன்று களவாடி செல்லப்பட்டிருந்தது.

காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கு அடுத்த நாள் புதன்கிழமை(8) இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது குறித்த மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத ஒருவர் களவாடி செல்வது தொடர்பான சிசிடிவி காணொளி ஒன்றினை பெற்றதுடன் மேலதிக விசாரணைக்காக ஏனைய அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை(18) அன்று கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் ஹெல்மட் ஒன்றுடன் அநாதரவாக மோட்டார் சைக்கிள் ஒன்று நீண்ட நேரமாக தரித்து உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸ் குழுவினர் களவாடப்பட்ட EP-BCJ-3381 இலக்கம் கொண்ட மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளதுடன் காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் ஒன்றினை வழங்கினர்.

குறித்த தகவலை பெற்றுக்கொண்ட காரைதீவு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து குறித்த மோட்டார் சைக்கிளை பொறுப்பேற்று சென்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை திருட்டு சந்தேக நபர்கள் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை(16) அதிகாலை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட கருப்பு நிற பல்சர் 150 Cc(EP BFE 9020) களவாடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் Cctv காணோளியில் உள்ளவாறு நடமாடுயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்விரு சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் கல்முனை தலைமையக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இப்பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் களவாடப்படுவதாகவும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.