இந்தத் தேர்தலை வைத்து அதிகாரிகளும், அரசாங்கமும் இணைந்து ஒரு நாடகத்தினை நடத்திக் கொண்டிருக்கின்றனர் …

(சுமன்)

தற்போதைய நிலையில் இந்தத் தேர்தலைப் பொருத்த மட்டில் அரச அதிகாரிகளும் அரசாங்கமும் இணைந்து ஒரு நாடகத்தினை நடத்திக் கொண்டிருப்பதாகவே நாங்கள் நாங்கள் நினைக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமழஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய தினம் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ் ஊடக சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளான முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், வவுணதீவு பிரதேச சபை உபதவிசாளர் பொ.செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடக்குமோ நடக்காதோ என்ற மனோநிலை இந்த நாட்டில் அனைவருக்கும் இருக்கின்றது. தேர்தல் என்பது அரசியலமைப்பின் பிரகாரம் காலத்திற்குக் காலம் நடைபெற வேண்டியது. ஒரு ஜனநாயக நாட்டிலே தேர்தல் ஒரு முக்கிய அங்கமாக இருக்கின்றது. மக்களினால் மக்களை ஆள வேண்டிய ஒரு நாட்டிலே தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. அந்த வகையில் எதிர்வரும் மார்ச் 09ம் திகதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்று நூலிலே ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றது.

உண்மையிலேயே எந்தவித கள்ளம் கபடமும் அற்று தங்களுடைய அரசியல் வங்குரோத்துத் தனத்தை இந்தத் தேர்தலிலே காட்டாமல் இந்தத் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு அரசாங்;கத்திற்கு இருக்கின்றது. தற்போதைய நிலையில் இந்தத் தேர்தலைப் பொருத்த மட்டில் அரச அதிகாரிகளும் அரசாங்கமும் இணைந்து ஒரு நாடகத்தினை நடத்திக் கொண்டிருப்பதாகவே நாங்கள் நினைக்கின்றோம்.

ஏனெனில் இந்த நாட்டின் பொருளாதார நிலைமை அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்கு தெரியும். அந்த வகையில் கடந்த வரவுசெலவுத் திட்டத்திலே பத்து பில்லியன் தேர்தல் ஆணையகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் நாட்டின் பொருளாதார நிலையில் அந்தப் பணம் கிடைக்குமா கிடைக்காதா என்பது தேர்தல் ஆணையகத்திற்கும், அதன் தலைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் அரசுடன் ஒரு சுமூகமான நிலைப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளாமல் ஏட்டிக்குப் போட்டியாகத் தேர்தல்கள் ஆணையாளர் தேர்தலை அறிவித்திருக்கின்றார்.

தேர்தலை அறிவித்த படி அந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஆணையிடுமாறு உச்ச நீதிமன்றத்திலே சில அரசியற் கட்சிகள், அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியிருந்தார்கள். தேர்தல் ஆணையகம் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போது மீண்டுமொரு ஆணையைப் பிறப்பிக்க வேண்டிய தேவை இல்லை என்று கூறியிருந்தது. அந்த வேளையில் தேர்தல் நடக்கும் என்ற ஒரு வெளிச்சம் எங்களுக்குத் தெரிந்தது. ஆனால் தற்போது நடந்துகொண்டிருக்கும் நிலைமைகளைப் பார்க்கும் போது இந்தத் தேர்தல் நடைபெறாது என்றே எங்களுக்குத் தோணுகின்றது.

ஏனெனில் தபால் வாக்கெடுப்பு காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டுக்களை அச்சடிக்கும் அரச அச்சகப் பிரதானி அச்சகத்திற்குரிய பணம் கொடுக்கப்படவில்லை என்று ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். தற்போது கூறுகின்றார் பாதுகாப்பு தரப்படின் அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்கலாம் என்று, ஆனால் பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அச்சடிக்கும் பணி தொடங்கினால் நாங்கள் பாதுகாப்புக் கொடுப்போம் என்று கூறியிருக்கின்றார். இது ஒரு வேடிக்கையான கருத்துகளாகவும், மக்களை ஏமாற்றும் நாடகமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

தேர்தல்கள் ஆணையாளர் கூறுகின்றார் தற்போதைய நிலையில் தேர்தலை தங்களால் நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்கான ஒரு நகல் பத்திரத்தை நகர்த்தி தனக்குள்ள இடையூறுகளையும், பணம் கிடைக்கமை தொடர்பிலும்  உச்சநீதிமன்றத்திற்கூடாகச் சொல்வதற்கு இருக்கின்றார். இந்த அனைவருக்கும் தெரிந்த விடயத்தை ஒரு நாடகமாக்கி அரசியற் கட்சிகளையும், சுயேட்சைக் குழுக்களையும், அதனூடாக இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்லிலே போட்டியிடும் வேட்பாளர்களையும் ஏமாற்றும் வித்தையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இந்தத் தேர்தல் நடைபெறாது விட்hல் வேட்பாளர்கள் அனைவரும் இதுவரை செலவழித்த பணம் வீண்விரயமாக்கப்படுகின்றது. அவர்கள் ஒவ்வொருவரும் செலவழித்த பணங்கள் இந்த நாட்டின் பணங்கள். தற்போதைய பொருளாதார நிலையில் இந்த தேர்தலை நடத்த முடியாது என்று ஆரம்பத்திலேயே ஒரு முடிவை எடுத்திருந்தால் வேட்பாளர்களாவது தங்களுடைய பணத்தை சேகரித்து வைத்திருப்பார்கள்.

அதற்கும் மேலாக இன்று தற்போதைய பொருளாதார நிலையில் மக்கள் மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலே அவர்களுக்குரிய தனிநபர் வருமானங்கள் எந்தவிதத்திலும் அதிகரிக்காமல் இருக்கின்றது. இவ்வாறிருக்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைககளை மேலும் அதிகரித்து இந்த அரசாங்கம் மேலும் மேலும் எமது மக்களை வதைக்கும் ஒரு செயற்பாட்டையே செய்கின்றது.

இன்று மின்சாரத்தின் விலைப்பட்டியல் அறுபத்தாறு வீதத்தால் அதிகரித்துள்ளது. அதேபோல் நீர்வழங்கல் திணைக்களமும் மின் கட்டணத்திற்கு ஏற்றால் போல் நீர் கட்டணத்தையும் அதிகரிப்பதாகத் தெரிவித்திருக்கின்றது.

எனவே இந்த நாட்டு மக்கள் ஏற்கனவே பொருளாதார நிலையில் மிகவும் நளிவடைந்து தனிநபர் வருமானங்கள் அதிரிக்காமல் இருக்கம் இந்த வேளையிலே அரசாங்கம் மேலும் மேலும் இந்த மக்கள் மீது இந்நிதிக் கஸ்டத்தை சுமத்துவது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.