நாட்டின் நலனுக்குக் கேடு விளைவிக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குக! – கரு ஜயசூரிய

அனைத்துத் தரப்பினரும் தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியின் பாரதூரத்தன்மையை சரியாகப் புரிந்துகொண்டு, நாட்டின் நலனுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடாதிருப்பது அவசியமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் அண்மைக்கால நிலைவரம் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு –

இன்றளவிலே எமது நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய நெருக்கடியின் உண்மையான நிலைவரத்தை அனைத்துத்தரப்பினரும் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.

இருப்பினும் தற்போது நாடு எதிர்கொண்டிருக்கும் மிகமோசமான ஆபத்து தொடர்பாக உண்மையான புரிதலுடன்தான் அனைத்துத்தரப்பினரும் செயற்படுகின்றார்களா? என்ற கேள்வியை எழுப்பவேண்டியிருக்கின்றது.

ஒட்டுமொத்த நாடு தொடர்பில் கொண்டிருக்கும் தீவிர கரிசனையுடனும், எந்தவொரு அரசியல் தரப்புடன்கூடிய அதிகார ஆசைகளுமின்றியே நாம் இவ்வாறு கேள்வி எழுப்புகின்றோம்.

அதுமாத்திரமன்றி இன, மத, மொழி உள்ளிட்ட குறுகிய மட்டுப்பாடுகளுக்குள் சிக்காத, முன்னேற்றமடைந்த நாட்டை எமது அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஒருவருக்கொருவர் பிரிந்துநின்று சண்டையிடக்கூடிய சூழ்நிலையில் இப்போது நாடு இல்லை. மாறாக, அனைத்துத் தரப்பினரதும் கூட்டிணைந்த கடப்பாட்டின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்புவதே தற்போதைய அவசிய தேவையாக இருக்கின்றது.

எனவே அரசாங்கமும், ஏனைய அரசியல் கட்சிகளும், ஏனைய முக்கிய கட்டமைப்புக்களும் தேசிய ரீதியிலான பொறுப்புணர்வுடன் செயற்படுவதுடன் அனைத்துப் பிரஜைகளும் பொதுவான புரிந்துணர்வைக் கொண்டிருப்பது காலத்தின் தேவையாகும்.

ஆகவே, நாட்டின் நலனுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் வலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று அரசாங்கம் மக்களின் உணர்வுகளையும் பிரச்சினைகளையும் நன்கு புரிந்துகொண்டு, நாடாளுமன்றத்தின் ஊடாக இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது அவசியமாகும். மேலும் மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து, தேர்தல்களை உரிய காலப்பகுதியில் நடத்துமாறும் வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.