வடமாகாண சுகாதார நிர்வாக விடயங்களில் முறைகேடுகளாம்! முன்னாள் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் காட்டம

வடக்கு மாகாண சுகாதார நிர்வாக விடயத்தில் உயர் பொறுப்புக்கான பதவிக்குச் சட்டவிரோதமானதும், முறை கோடானதுமான நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு –

வடக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக அண்மையில் திலிப் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாணத்தின் சுகாதார நிர்வாக சேவைகள் ஆணையாளராக வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் இருந்துள்ளார்.

அவரது காலம் முடிவடைந்த பிறகு அவரது இடத்திற்கு அடுத்ததாகப் பிரதி ஆணையாளராக வைத்திய கலாநிதி நந்தகுமார் சுகாதார நிர்வாக சேவையாளர் பட்டியலில் முன்னணியிலுள்ளார்.

அவ்வாறான தகுதியும், அனுபவமும் உடைய ஒருவர் இருக்கத்தக்கதாக இந்தப் பட்டியலில் 68 ஆவது இடத்தில் இருக்கும் திலீப் லியனகே எல்லபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றியவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்தவர் தரபட்டியலில் முதலாவதாகவும், கேதீஸ்வரனுக்கு அடுத்ததாக இருப்பவர் நந்தகுமார். இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் பதில் ஆணையாளராகக் குறித்த காலங்கள் கடமையாற்றி அனுபவம் வாய்ந்தவர்.

இந்த நியமனத்தைச் செய்யும் பொறுப்பும் கடமையும் மாகாண சபைக்குரிய அதிகாரம் ஆகும். ஒரு மாகாண திணைக்கள ஆணையாளரையோ ஏனைய வைத்தியர்களையோ நியமித்தல், இடம் மாற்றம் செய்தல் என்பன மாகாண சபைக்குரியது.

மாகாண சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி இல்லாத பட்சத்தில் அந்த அதிகாரமும் பொறுப்பும் ஆளுநருக்குரியதாகும். முறைகேடாக ஒருவர் அனுப்பப்படும் போது அவரை ஏற்பதும் நிராகரிப்பதும் ஆளுநரின் பொறுப்பும் கடமையும் ஆகும். இவ்வாறு இருக்கையில் முறைகேடான நியமனத்தைச் செய்தவர் ஆளுநரே.

இவங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் இலங்கையில் எந்தப் பகுதியிலும் வேலை செய்யலாம். அதேபோல் கல்வி நிர்வாக சேவை எனப் பல சேவைகள் உள்ளன. மாகாணத்துக்கான தகுதி வாய்ந்த அதிகாரிகள் இல்லாதபோது அந்த மாகாணத்தினுடைய மாகாண சபையின் அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் இல்லாத பட்சத்தில் ஆளுநர் மத்திய அரசாங்கத்திடம் பதவிக்கு ஆள் தேவையென எனக் கேட்கும்போது அவர்கள் விடுவிக்க முடியும்.

அவ்வாறு விடுவிக்கும் ஒருவரை ஏற்பதா? இல்லையா? என்பதை மாகாண சபை தீர்மானிக்கும். இன்று மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாகாண சபை இல்லாத காரணத்தால் அதன் நிர்வாகக் கட்டமைப்பு ஆளுநரின் பொறுப்பாக உள்ளது. மத்திய அரசாங்கம் ஒருவரை அனுப்பினாலும் அவருக்கு ஆளுநரின் நியமன கடிதம் இல்லாமல் அந்தப் பதவியை ஏற்க முடியாது. இன்று லியனகே பதவியை ஏற்றாரெனில் ஆளுநரின் கடிதத்தைப் பெற்றாரா? இல்லையா? என்ற கேள்வி உள்ளது.

ஆளுநர் நியமன கடிதம் கொடுக்காமல் பொறுப்பேற்று இருக்க முடியாது. அவ்வாறாகக் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தால் ஆளுநர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மாகாணத்துக்குரிய திணைக்கள ஆணையாளராக இணையும் ஏனைய முக்கிய அதிகாரிகளையும் நியமிக்கும் பொறுப்பு மாகாண சபைக்குரியதாக உள்ளபோதும் இவரது நியமனம் சட்டவிரோதமானது.

13 ஆவது திருத்தச் சட்டத்துக்கும் வடக்கு மாகாணத்தில் கொண்டுவரப்பட்ட மருத்துவ சேவைகள் நியதி சட்டத்தில் மாகாண சுகாதார சேவைகள் ஆணையாளரை நியமிக்கும் பொறுப்பு மாகாண சபை க்குரியது எனக் கூறப்பட்டது. இந்த நியமனம் இந்தச் சட்டங்களுக்கு முரணான செயற்பாடாகும்.

ஆகவே முறைகேடானதும் சட்ட விரோதமானதுமான நியமத்தை அடுத்து வரக்கூடிய வாரம் ஒன்றுக்குள் ஆளுநர் ரத்து செய்து இதற்குரிய சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு ரத்து செய்யத் தவறினால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்