ஜனநாயக ஆட்சி இடம்பெற வேண்டுமானால் உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் – இராதாகிருஷ்ணன்

நாட்டில் சர்வாதிகாரம் இல்லாத ஜனநாயக ஆட்சி இடம்பெற வேண்டுமாக இருந்தால் உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசியல் ரீதியாகத்தான் பிற்போடப்பட்டுள்ளது அனைவருக்கும் தெட்டத்தெளிவாகத் தெரிந்த விடயம். அத்துடன் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்க்க விசேட குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன் கிழமை) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

விமர்சனங்களுக்கு மத்தியில் துறைமுக நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொவிட் , பொருளாதார வீழ்ச்சி. அரசியல் ஸ்திரமற்ற நிலைமை இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்த போர்ட் சிட்டி அமைக்கும் போது சீனாவுடன் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கமான உறவு காரணமாக இந்தியாவுடன் பகைத்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

இந்தியாவின் பகைமையை பெற்றுக்கொண்டு இதனை நடைமுறைப்படுத்தினாலும் எமக்கு ஆபத்தில் உதவியது இந்தியாதான் என்பதை நாங்கள் மறக்க முடியாது.

400 கோடி அமெரிக்க டொலரை இந்தியா கொடுத்தது. இந்தியா ஆபத்தில் கை கொடுத்தது. சீனா ஆபத்தில் கைவிட்டது.

இதுதான் உண்மையான விடயம். சிறந்த வெளிநாட்டு கொள்கைத் திட்டம் முறையாக பேணப்படாமையின் காரணமாகவே இன்று சர்வதேச ரீதியில் இலங்கைக்கு உள்ள நற்பெயர் குறைந்துள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.

வெளிநாட்டு மக்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் அரசாங்கத்தின் மீது இன்று நம்பிக்கை இல்லை. நம்பிக்கையில்லாமையின் காரணமாக வெளிநாட்டு உதவி கிடைப்பது தடுக்கப்படுகிறது. மக்கள் தினமும் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

போராட்டம் செய்யும் போது பல்வேறு வகைகளில் போராட்டக்காரர்களை துன்புறுத்தும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. நாட்டின் அமைதியைப் பேண வேண்டுமாயின் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதிக்கு கூறுகின்றோம்.

ஜனாதிபதி மக்களின் வாக்குகள் இல்லாமல் வந்தாலும் தற்போது மக்களின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவாகும். அதனால் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளுங்கள்.

எனவே இந்த நாட்டில் சர்வாதிகாரம் இல்லாத ஜனநாயக ஆட்சி இடம்பெற வேண்டுமாக இருந்தால் உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இன்று உள்ளூராட்சி சபை அரசியல் ரீதியாகத்தான் பிற்போடப்பட்டுள்ளது அனைவருக்கும் தெட்டத்தெளிவாக தெரிந்த விடயம். தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்த வேண்டும் என கூறியபோதிலும் அச்சிட பணம் இல்லை , பாதுகாப்புக்கு பொலிஸார் இல்லை எனக் கூறப்படுகிறது.

நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையெனில் என்றாவது ஒருநாள் நாடாளுமன்றத்திலுள்ள 225 பேருக்கும் பிரச்சினை உருவாகும். கெட்டபெயர் ஏற்படும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

அத்துடன் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அதனால் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிக்கவேண்டும் என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.