முஸ்லிம் காங்கிரசுடன் எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லை – சீ.யோகேஸ்வரன்

முல்லைத்தீவு கரைத்துறைபற்று பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸூடன் எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லையெனவும் சிலர் போலியான பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றனர் எனவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

மட்டு.ஊடக அமையத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன் ஆகியோர் ஊடகங்களைச் சந்தித்தனர் இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் –

வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றது. இதேநிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைபற்று பிரதேசசபைக்கான தேர்தலிலும் தமிழரசுக்கட்சி வேட்புமனு தாக்கல் செய்திருந்தது. அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் சென்றும் அதுவும் நிராகரிக்கப்பட்டதால் எமது பிரதிநிதிகள் மிகவும் கவலையடைந்தனர்.

அந்த பிரதேசத்தில் உள்ள ஹிஜிறா நகர் என்ற கிராமத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. ஒரு கிராமத்திற்குள்ளேயே முழு வேட்பாளர்களையும் நிறுத்தியிருந்தது. அந்தப் பகுதியில் ஹிஜிறா நகர் தவிர்ந்த அனைத்து பகுதிகளிலும் எமது தமிழரசுக்கட்சி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இங்கு ஊடகங்களில் காட்டப்படுவதுபோன்று ஒப்பந்தங்கள் எவையும் செய்யப்படவில்லை. சில பிரதேசசபைகள் மற்றும் கிழக்கு மாகாணசபை தொடர்பில் ஒப்பந்தங்கள் ஹக்கீமிடம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் எந்த ஒப்பந்தங்களும் செய்யப்படவில்லை.

இலங்கை தமிழரசுக்கட்சியை கிழக்கில் ஓரங்கட்டவேண்டும் என்பதற்காக இதர கட்சிகள், பல முனைப்புடன் செயற்படுகின்றன. சில சம்பவங்களைப் பெரிதுபடுத்தி ஊடகங்களில் வெளியிடும் சம்பவங்கள் மலிந்துவிட்டன.உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சியின் வாக்கை இல்லாமல்செய்யவேண்டும் என்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்துக்கோ, மட்டக்களப்பு மாவட்டத்துக்கோ பாதகமான செயற்பாடுகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.

தமிழரசுக்கட்சியின் யாப்பில் முஸ்லிம்கள் தொடர்பிலும் உள்ளதாக சிலர் இன்றும் கூறிவருகின்றனர். 1949 ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது யாப்பு வரையப்பட்ட நிலையில் அந்தக் காலத்தில் முஸ்லிம்களுக்கென்று கட்சியிருக்கவில்லை. முஸ்லிம்கள் இலங்கை தமிழரசுக்கட்சியுடனும் அரசாங்கத்துடனுமேயே இணைந்திருந்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் ஸ்தாபக தலைவர் அஸ்ரப் அவர்களும் இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினராக இருந்தவர். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கின்றார்கள்.

ஆனால் தற்போது முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல கட்சிகள் இருக்கின்றன. தற்போது தமிழரசுக் கட்சியில் தமிழ் வேட்பாளர்களையே நாங்கள் இறக்கியுள்ளோம்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியைப் பொறுத்த வரையில் இன நல்லிணக்கத்தை எதிர்பார்க்கின்றது. ஆனாலும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றது. நாங்கள் எந்தவிட்டுக்கொடுப்புக்கும் தயாரில்லை. தமிழ் மக்கள் பாரிய தியாகங்களைச் செய்தவர்கள். அவர்களின் தனித்துவம் தொடர்பில் நாங்கள் உறுதியாக இருப்போம். ஆளுந்தரப்பாக இருக்கலாம்,எங்களது எதிர்க்கட்சிகளாக இருக்கலாம் அவர்களுக்கு ஏற்றமாதிரி எதிரான பிரசாரங்களை செய்யலாம். அவர்கள் கூறுகின்றமை பொய்யான விடயமாகும்.

தந்தை செல்வா தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தபோது தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கவேண்டுமானால் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் எல்லாம் ஒன்றுபடவேண்டும் என்பதற்காகவே உருவாக்கியிருந்தார். அதன் பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர், தமிழ் மக்கள் ஒன்றுபடவேண்டும். ஒன்றுபட்ட கோரிக்கையுடன் செயற்படும்போது தமிழர்களின் உரிமையைப் பெறமுடியும் என்பதற்காக தன்னுடன் முரண்பட்ட கட்சிகளைக்கூட இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிந்துசெயற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

ஆனாலும் தற்போது நடைபெறும் கலப்புமுறை தேர்தல் முறை, அதிகாரங்களை முழுமையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறுவதில் பாரிய சிக்கல்கள் உருவாகின்றன. மட்டக்களப்பு மாநகரசபையில் 20 வட்டாரங்களில் 17 வட்டாரங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய நிலையிலும் ஆட்சியமைப்பதற்கு இதர கட்சிகளையும் நாடவேண்டிய நிலையேற்பட்டது. அவ்வாறான நிலையின்போது எங்களிடம் அந்தக் கட்சிகள் பேரம்பேசும் நிலைமையும் காணப்படுகின்றது.

அவ்வாறில்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் பிரிந்துகேட்கும்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே பூரணமாக ஆட்சியமைக்கும் நிலையுருவாகலாம் என்ற அடிப்படையிலேயே பேச்சுகள் மூலம் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழரசுக்கட்சி தீர்மானம் எடுத்த பின்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுகள் நடைபெற்றன. அனைவரையும் இணைந்தே செயற்படுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் 10 உறுப்பினர்களும் இலங்கையில் தமிழரசுக்கட்சியில்தான் இருக்கின்றார்கள். அவர்களை நாங்கள் பிரிந்தவர்களாகக் கருதவில்லை. – எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.