போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு!

பாறுக் ஷிஹான்
மாணவர் சமூகத்தின் மத்தியில் காணப்படும் போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்யும் பொருட்டும்  அது தொடர்பாக மாணவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் கல்முனை தலைமைய பொலிஸ் நிலையம் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு  நிகழ்வு இன்று  கமு/கமு/அல்-பஹ்றியா தேசிய பாடசாலையில்  இடம்பெற்றது.  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  பங்கேற்புடன் இடம்பெற்ற இவ் நிகழ்வினை பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால்  தலைமை தாங்கினார்.
கா.பொ.த சாதாரண தர  மற்றும்  உயர்தர மாணவர்களுக்கு  போதைப்பொருள் குற்றச்செயல்களை தடுப்பது  போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்தல்   போதைவஸ்து தடுப்பு மற்றும் சுற்றுச்சூழலில் போதைப்பொருளின் தாக்கம் தொடர்பில் விரிவாக விளக்கவுரைகள் இடம்பெற்றன.
இங்கு கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் கருத்து தெரிவிக்கையில்
கல்முனை பகுதியில் போதைபொருள் பாவனை பரவல் அதிகரித்திருக்கின்றது. இதற்காக விழிப்பூட்டல்களை நாம் மேற்கொண்டுள்ளோம்.அதனை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  இவ்விடத்தில் முக்கியமாக கூற விரும்புகின்றேன். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் சமூகத்தில் உள்ளே மறைந்து செயற்படுகின்றார்கள்.அவர்களை இனங்காட்ட முன்வர வேண்டும். இன்று சமூக மட்டத்தில் படிப்படியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.சமய நிறுவனங்கள் சமூக நிறுவனங்கள் புத்திஜீவிகள் எல்லோருக்கும் இது பிரச்சினையாக வந்து விட்டது.இப்பிரச்சினையை  ஒவ்வொரு பெற்றோர்களும் அனுபவித்து கொண்டிருக்கின்றார்கள்.
எதிர்காலத்தில் பல சுற்றிவளைப்புகள் இப்பகுதியில் இடம்பெறும்.இதில் எதிர்பாராத முறையில் பலரும் பிரச்சினைக்கு உள்ளாவார்கள்.அவர்கள் தொடர்பாக அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன. தொடர்ந்தும் இப்போதைப்பொருள் தடுப்பு  செயற்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என கூறினார்.
இதன் போது   கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட்  உட்பட  பாடசாலை  அபிவிருத்தி சங்கம் பெற்றொர் சங்கம் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.