சில அதிகாரிகள் போலியான ஆவனங்களை தயாரித்து அரசகாணிகளை அபகரிக்கின்றனர் – எஸ்.வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில அரச அதிகாரிகள் போலியான ஆவனங்களைத் தயாரித்து அரசகாணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட காணி கோரிக்கை தொடர்பான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சவுக்கடி பகுதியில் காணியற்ற மக்கள் அரசகாணிகளில் குடியேறமுற்பட்ட நிலையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முறுகல் நிலையேற்பட்டது.

சவுக்கடி பகுதியில் பெருமளவான மக்கள் காணியற்று உள்ள நிலையில் அங்குள்ள அரச காணிகளைத் தனவந்தர்கள் பெருமளவில் அபகரித்துவரும் நிலையில் காணியற்ற மக்கள் தொடர்ந்து காணியற்ற மக்களாகவே இருந்துவருகின்றனர் என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதி மக்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை அந்தப் பகுதியில் போராட்டம் நடத்திய நிலையில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அந்தப் பகுதிக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

மேற்படி பகுதியில் நீண்டகாலமாக காணி அபகரிப்புகள் பெருளமவில் நடைபெற்றுவரும் நிலையில் அதனைத் தடுக்க முனையாதவர்கள் தாங்கள் இருப்பதற்கு காணிகளை அடைக்கமுனையும்போது தங்களைக் கைதுசெய்யமுனைவதாக மக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

எவ்வாறாயினும் தமக்கான காணிகளைப் பெற்றுத்தர அதிகாரிகள், அரசியல்வாதிகள் முயற்சிகளை செய்யவேண்டும் என இங்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆத்துடன் அரசகாணிகளைப் பாதுகாப்பதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்றைக் கூட்டி காணி மாபியாக்கல் தொடர்பான விவரங்களை வெளியிடப்போவதாகவும் காணிகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உறுதியளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்