போதைப்பொருளை அழிக்கும் புதிய இயந்திரம் பொருத்தப்படும் – விஜயதாச ராஜபக்ஷ

ஒரே தடவையில் சுமார் 1000 கிலோகிராம் போதைப்பொருளை அழிக்கும் இயந்திரம் பொருத்தமான இடத்தில் நிறுவப்படும் எனவும், அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் சுமார் 3000 கிலோகிராம் ஐஸ், ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பகுப்பாய்வு அறிக்கைகளை வழங்குவதற்கான வேகம் 100% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 2015 ஆம் ஆண்டிற்குப் பின்னர், கொரிய அரசாங்கம் வழங்கிய இரண்டு புதிய ஆய்வகங்களை நிறுவியதன் மூலம் சர்வதேச தரத்தின் முழுமையான அறிக்கைகளை வழங்குவது சாத்தியமாகியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்காக விசேட ஒழுங்குமுறைகளை உள்ளடக்கிய புதிய முறையான சட்ட முறைமையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த இரண்டு மாதங்களில் அது நடைமுறைப்படுத்தப்படும்.

இலங்கைக்குள் போதைப்பொருளை கொண்டு வரும் சர்வதேச கடத்தல்காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை வீட்டுக்காவலில் வைத்து புனர்வாழ்வளிக்க முறைமை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்