உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் புதிய திருத்தங்கள் : சந்தேகநபரைத் தடுத்துவைக்கும் வாய்ப்பு இல்லாதொழிக்கப்படும் – விஜயதாஸ

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை அரசியல் தேவைப்பாடுகளின் அடிப்படையிலோ அல்லது பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் உத்தரவின்பேரிலோ பொலிஸாரால் தடுத்துவைப்பதற்குக் காணப்படும் அதிகாரம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் இல்லாதொழிக்கப்படுமென நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதன்படி பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தின் முழுமையான மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுவதுடன் அந்தப் புதிய சட்டத்தின்கீழ் பொலிஸாரோ அல்லது வேறு தரப்பினரோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும், சந்தேகநபர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் உத்தரவாதமளித்துள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களைத் தடுப்புக்காவல் உத்தரவின் பிரகாரம் நீண்டகாலம் தடுத்துவைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

அதேபோன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டு, அதனடிப்படையில் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டுவருகின்றது. இருப்பினும் புதிய சட்டத்தின்கீழ் சந்தேகநபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும் நடைமுறை திருத்தியமைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படும் சந்தேநபர்கள்மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களின் விளைவாகவே அவர்கள் வாக்குமூலம் வழங்குவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டைக் கருத்திற்கொண்டு, அதனுடன் தொடர்புடைய சரத்துக்களைத் திருத்தியமைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்