மின்கட்டண உயர்வு: மலையகமே முதலில் இருளில் மூழ்கும் – வேலு குமார்
நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா கூடக் கிடைப்பதில்லை.
இந்நிலையில் தற்போது மின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாட வாழ்க்கைச் செலவைக் கொண்டு நடத்த முடியாத மக்களால் அதிகரித்த மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் போகும் நிலை உருவாகும். அப்போது மலையகமே முதலில் இருளில் மூழ்கும் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அதிக அளவில் மலையக மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒருநாள் அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபா கூட பல பகுதிகளில் கிடைப்பதில்லை.
இன்று வாழ்க்கைச் செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளது. நகரப்பகுதியில் உள்ள பணக்காரர்கள் கூட மின் கட்டண உயர்வால் திண்டாடுகிறார்கள். அவர்களின் நிலைமையோ இவ்வாறு இருக்க தோட்ட தொழிலாளர்களின் நிலைமை என்ன என்பது தொடர்பில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எவ்வாறு மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவார்கள்? அதிகரித்த மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் மலையகமே முதலில் இருளில் மூழ்கும் என்பது உறுதியாகும்.
நாம் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளோம். அரசியல் ரீதியாகப் பலமிழந்துள்ளோம். ஆனால், இன்று அரசாங்கத்தில் சிறுபான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் இருக்கிறார்கள். அரசாங்கத்துக்கு இவர்களால் அழுத்தம் பிரயோகிக்க முடியும். ஆனால், பதவிகளில் இருப்பவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். இருப்பினும், எதிர்க்கட்சி என்ற வகையில் தொடர்ச்சியாக நாங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறோம்.
அதேவேளை, அதிகாரத்தில் உள்ள எந்தவொரு அரசாங்கமும் இனவாதத்தை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றது. அதாவது அதிக அந்நிய செலாவணியை பெற்றுத் தருகின்ற பெருந்தோட்டத்துறை காணப்பட்ட போதிலும், அதனைக் கண்டுகொள்வதாக இல்லை. இதைப் பார்க்கும்போது சகல அரசாங்கங்களும் இனவாதத்தை அடிப்படையாக கொண்டு செயற்படுகின்றன என்றே கூறலாம்.
மேலும், தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் 3 ஆயிரத்து 500 ரூபா வரையில் அதிகரிக்கப்பட வேண்டும். அதன் சாத்தியத் தன்மையை எவ்வாறானது என்பது தெரியாது. ஆனால், இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மக்களுக்கு உயிர் வாழ்வதற்கு உணவில்லை, மருந்து இல்லை, மின்சாரம் இல்லை, அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றால் அடுத்த கட்டமாக மக்கள் சுயாதீனமாக வீதிக்கு இறங்கிப் போராடுவார்கள்.
எதிர்காலத்தில் மக்கள் போராட்டம் எழப் போகிறது. இந்த போராட்டங்களின் விளைவு பாரதூரமானதாகக் காணப்படும். ஆனால், இதுபோன்றதொரு மிக மோசமான நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. இதன் காரணமாகவே நாங்கள் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.
இந்நாட்டின் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். இது தொடர்பில் நாங்களும் சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடுகிறோம். குறிப்பாக, அயல் நாடான இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுடன் எமது மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை