ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட 56 கட்சிகள் கலந்துரையாடல்

ஐக்கிய தேசிய கட்சியை விட்டுச்சென்றவர்கள் எவரும் நிலைத்திருந்ததில்லை. வரலாற்றில் இருந்தே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிளவு பொதுத் தேர்தலில் அந்த கட்சியில் போட்டியிட யாரும் இருக்கார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட 56 கட்சிகளைச்சேர்ந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுன் இணைந்து செயற்பட கலந்துரையாடி வருகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சிகளை உருவாக்கியவர்கள் ஒருபோதும் நிலைத்திருக்கவில்லை.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, லலித் அத்துலத் முதலி, ருக்மன் சேனாநாயக்க, காமினி திஸாநாயக்க என பிரிந்து சென்ற எவரும் வரலாற்றில் நிலைத்திருக்கவில்லை. அதேநிலைதான் தற்போது சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடம்பெறப்போகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி தற்போது பல குழுக்ககளாகப் பிளவுபட்டிருக்கிறது. பொன்சாகா அணி, ராஜித்த அணி, சம்பிக்க அணி என பிளவு பட்டிருக்கிறது. இவர்களை ஒன்றிணைப்பதற்கு சஜித் பிரேமதாஸவுக்கு ஆளுமை இல்லை.

அதனால் அவர் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு லக்ஷ்மன் கிரியெல்லவிடம் பொறுப்புக்கொடுத்துவிட்டு, நாடுபூராகவும் பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு இல்லை என்றால், பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற 54 உறுப்பினர்களையும் முடியுமானால் ஒரு மேடையில் அமர்த்திக்காட்டட்டும் என சஜித் பிரேமதாஸவுக்கு சவால் விடுக்கிறேன்.

அடுத்த பொதுத் தேர்தலிலாகும்போது ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிரேமதாஸவும், லக்ஷ்மன் கிரியெல்லவும் மாத்திரமே இருப்பார்கள்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாணத்திலும் கட்சியை பலப்படும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

இதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.

இதுவரை 56 கட்சிகளைச்சேர்ந்த உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துசெயற்பட முன்வந்திருக்கின்றனர். இதில் ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் இருக்கின்றனர். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.