அரசின் நெல் கொள்வனவு திட்டம்: முல்லைத்தீவுக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு

அரசின் நெல் கொள்வனவு திட்டத்துக்கமைய முல்லைத்தீவில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு சுமார் 10 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு இடத்தைத் திறந்து வைத்தல் மற்றும் விவசாயிகளிடம் நெல் கொள்வனவு செய்தல் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கணுக்கேணி கிழக்கில் அமைந்துள்ள’ ரவி அரிசி ஆலையில்’ நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், நெல் கொள்வனவு இடத்தைத் திறந்துவைத்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவை ஆரம்பித்து வைத்துள்ளார்.

அரசின் நெல் கொள்வனவு திட்டத்துக்கமைய முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 10 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரதான நோக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் வறுமையில் உள்ள மக்களுக்கு அரிசியை இலவசமாக வழங்குவதாகும்.

இந்த நெல் கொள்வனவு நேரடியாகப் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்படுவதோடு களஞ்சியப்படுத்தபடவும் உள்ளது.

பிரதேச செயலாளருக்கும் நடுத்தர மற்றும் சிறிய ஆலை உரிமையாளருக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதாவது ஒரு கிலோ பச்சை நெல்லை அரிசியாக்குவதற்கு 7 ரூபாவும், அவியல் நெல் ஒரு கிலோ அரிசியாக்குவதற்கு 9 ரூபா 50 சதமும் அரிசி ஆலை உரிமையாளருக்கு வழங்குவதோடு 10கிலோ அரிசி பைக்கெட் ஒன்றுக்கு 50 ரூபாவும் மட்டுமே ஆலை உரிமையாளருக்கு வழங்கப்படும்.

இந்த 10 கிலோ அரிசி பொதி முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் வறுமையில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்குப் பங்குனி மாதம் 10 கிலோ, சித்திரை மாதம் 10 கிலோ என்ற அடிப்படையில் இலவசமாக அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் மாவட்ட பிரதம கணக்காளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், ஏனைய உத்தியோகஸ்தர்கள், ஆலை உரிமையாளர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பல குடும்பங்களை மிகுந்த வறுமைக்குள் தள்ளியுள்ளது. இவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

இதன் செயற்பாடாக அரசின் நெல் கொள்வனவு திட்டத்துக்கு அமைய நெல் கொள்வனவு நாடுபூராகவும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.