அமெரிக்க செனட் சபையின் அறிவிப்பு இலங்கை மீதான சர்வதேச நிலைப்பாட்டை தெளிவாக பிரதிபலிக்கிறது – ஹர்ஷ டி சில்வா

அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டலுவல்கள் குழுவின் தலைவர் தேர்தலை மேலும் காலம் தாழ்த்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளமையின் ஊடாக , இலங்கை தொடர்பில் சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாக அறியமுடிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் ஜனநாயகம் சர்வாதிகாரத்தினால் முடக்கப்பட்டுள்ளது என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடாகவுள்ளது என்பது தெளிவாகிறது எனவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனக் கூறும் அரசாங்கம் எதற்காக தேர்தலைக் கண்டு அஞ்சுகிறது. சர்வதேச நாணய நிதியத்தையும் தேர்தலையும் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அரசாங்கத்திடம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்தில் அமெரிக்காவே பெரும்பான்மை வகிக்கின்றது. இந்நிலையிலேயே அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டலுவல்கள் குழுவின் தலைவர் தேர்தலை மேலும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில் அவதானம் செலுத்தும் போது இலங்கையில் ஜனநாயகம் சர்வாதிகாரத்தினால் முடக்கப்பட்டுள்ளது என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடாகவுள்ளது என்பது தெளிவாகிறது.

தேர்தலை நடத்துவதற்கு 4.5 பில்லியன் ரூபா போதுமானதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் செலவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 7880 பில்லியன் ரூபாவில் 4 பில்லியனை வழங்க முடியாதா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இம்முறையும் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.

மனித உரிமைகள் என்பது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் மாத்திரமல்ல. வாக்குரிமையும் மக்களின் அடிப்படை உரிமையாகும். அதன் அடிப்படையில் இலங்கையின் தேர்தல் விவகாரம் குறித்தும் ஐ.நா. அவதானம் செலுத்தும்.

தேர்தலைக் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதால் சர்வதேசத்தின் உதவி கிடைத்து விடும் என்று அரசாங்கம் கற்பனை செய்யக் கூடாது.

அமெரிக்க செனட்சபையின் அறிவிப்பின் ஊடாக இலங்கை தொடர்பில் சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாக அறியமுடிகிறது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.