பாராளுமன்றத்தின் கௌரவத்தை மலினப்படுத்தும் செயற்பாடுகளுக்கு சபாநாயகர் துணைபோகக்கூடாது – அநுர பிரியதர்ஷன யாப்பா

பாராளுமன்றத்தின் கௌரவத்தை மலினப்படுத்தும் செயற்பாடுகளுக்கு சபாநாயகர் துணைசெல்ல கூடாது என்பதை சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினோம்.

நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. நாட்டு மக்கள் ஒன்றுத்திரண்டு வீதிக்கு இறங்கினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என சுயாதீன எதிர்க்கட்சி உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

சபாநாயகருக்கும்,எதிர்க்கட்சி மற்றும் சுயாதீன உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றுத்துறை அதிகாரத்தை கொண்டு பாராளுமன்றத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,நாட்டில் தேர்தல் என்பதொன்று இல்லை என்று அவர் குறிப்பிடுவது எவ்விதத்தில் நியாயமாகும்.

ஜனாதிபதியின் நிலைப்பாட்டின் பிரகாரம் இல்லாத உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் ரூபாவை திறைச்சேரி ஏன் ஒதுக்க வேண்டும்.

தனது தேவைக்கு ஏற்ப ஜனநாயகத்தை மாற்றியமைக்க முயற்சிக்கும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கது என சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினோம்.

நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உண்டு,ஆகவே பாராளுமன்றம் தலையிட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பாராளுமன்றத்தை நாடியுள்ளது.

திறைசேரியின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைத்து இவ்விடயம் தொடர்பில் வினவினால் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட விடயத்தையே குறிப்பிடுவார்.

நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உண்டு,ஆகவே பாராளுமன்ற மட்டத்தில் ஒரு சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

தேர்தல் நடவடிக்கைக்கு தேவையான நிதி விடுவிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை எடுக்க 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு 225 உறுப்பினர்களுக்கும் உண்டு.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தயார் என குறிப்பிடும் ஆளும் தரப்பினர் தான் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஆதரவாக உள்ளார்கள்.

பாராளுமன்றத்தின் கௌரவத்தை மலினப்படுத்தும் செயற்பாடுகளுக்கு சபாநாயகர் துணைசெல்ல கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தினேன்.

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் உரிமை பாராளுமன்றத்திற்கு உண்டு. நிதி விடுவிப்பு தொடர்பில் பாராளுமன்ற மட்டத்தின் ஊடாக ஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க 224 உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.