பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம்! போராடி வென்ற இலங்கை தமிழ் பெண்

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதாக அச்சுறுத்தப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர், உள்துறை அலுவலகத்துடனான ஆறு ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின் பிரித்தானியாவில் வாழும் உரிமையை வென்றிருக்கிறார்.

இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த ஷண்முகத்துக்கு (வயது – 74), 1994 ஆம் ஆண்டு அகதி நிலை வழங்கப்பட்டிருந்தது. பின்னர் அவரது பிள்ளைகளும் அவரைப் பின்தொடர்ந்து பிரித்தானியா வர, அவர்களுக்கும் அகதி நிலை வழங்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு, கணவன் மனைவி விசாவில் பிரித்தானியா வந்த சுசிதா பாலசுப்ரமணியம் (வயது -66), தன் குடும்பத்துடன் இணைந்துகொண்டார்.

கணவர் ஓய்வு பெற்றதால் உருவான பிரச்சினை இந்நிலையில், சுசிதாவின் கணவரான ஷண்முகம் பணி ஓய்வு பெற்றதால், பிரித்தானியாவில் வாழ்வதற்கான நிதி நிலைமை அவர்களுக்கு இல்லாததால் சுசிதா தன் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் விட்டுவிட்டு இலங்கைக்குத் திரும்பிச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டார்.

ஷண்முகம் தனது ஓய்வூதியம் மற்றும் சேமிப்புக்காக தன் பங்களிப்பைச் செய்திருந்த நிலையிலும், உள்துறை அலுவலக விதிகள், ஸ்பொன்ஸர் செய்பவர் தனக்கு பணி மூலம் 18 ஆயிரத்து 600 பவுண்கள் வருவாய் இருப்பதாக காட்டவேண்டும் என்கின்றன.

தங்கள் பிள்ளைகள் தங்களை ஆதரிப்பதாக தம்பதியர் வாதிட்டும் அதை உள்துறை அலுவலகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

2016ஆம் ஆண்டு தனது விசாவை புதுப்பிக்க விண்ணப்பம் செய்தார் சுசிதா. ஆனால், அவரது கணவர் ஓய்வு பெற்றதைக் காரணம் காட்டி அவரது விண்ணப்பம் உள்துறை அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து 2018ஆம் ஆண்டு ஒருமுறையும், பின்னர் 2021ஆம் ஆண்டு ஒருமுறையும் மேல்முறையீடு செய்து, நிராகரிப்பையே சந்தித்து, பின் 2022ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அணுக, அந்நீதிமன்றம் உள்துறைச் செயலர் தன் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என உத்தரவிட்டது.

தற்போது, அதாவது, 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், பிரித்தானியாவில் தங்கியிருக்க சுசிதாவுக்கு உள்துறை அலுவலகம் எழுதியுள்ள கடிதத்தில், பிரித்தானியாவில் தங்கியிருக்க அவருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட போராட்டத்துக்குப் பின் தன் குடும்பத்துடன் தங்கியிருக்க அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, தனக்கு நீதி கிடைத்துள்ளதாகவும், தனது தூக்கமில்லா இரவுகள் முடிந்துபோனதாகவும், தெரிவித்துள்ள சுசிதா, தான் இப்போதுதான் நிம்மதியாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.