வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பெப்ரவரி முதல் வாரத்தில் 23.5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்தாண்டு செப்டெம்பர் மாதத்தில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வெளிநாட்டு கையிருப்பு இந்தாண்டு பெப்ரவரி மாதத்திற்குள் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.

“கடந்த செப்டெம்பரில் 94.9 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் இந்தாண்டு ஜனவரியில் 60.1 சதவீதமாகக் குறைந்துள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் 29,802 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒப்பிடுகையில், முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 261 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தாண்டு முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 107,639 ஆக உள்ளது. “இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் தற்போதைய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேர்மறையான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாகும்” என்றார்.

ஆழமான பாதாளத்தில் இருந்த நாடு வளமான எதிர்காலத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுவதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட பொருளாதார கொள்கை முடிவுகளினால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் உயர்வடைந்து வருகின்றது.

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டில் நிலவும் அமைதியான சூழல் என்பன ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதற்கான காரணிகளாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.