கல்வியில் முழுமை கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் – யாழ். பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன்

ரம் 9 முதல் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் வரை பிள்ளைகள் எந்தத் திசையில் போகவேண்டும் என்பதை தீர்மானிக்கக்கூடிய பரீட்சை என்ற வகையில் இந்த புதிர்ப் போட்டி தீர்க்கதரிசனம் மிக்க பரீட்சையாகும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார்.

சட்டத்தரணியின் மறைந்த தாய் மற்றும் மனைவியான முறையே திருமதி. எஸ்.இராஜரட்ணம், திருமதி. பத்மபாஷினி செல்வஸ்கந்தன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக சட்டத்தரணி இ.செல்வஸ்கந்தனின் அனுசரணையுடன் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியினால் கடந்த 2022ஆம் ஆண்டு வட மாகாண ரீதியில் நடத்தப்பட்ட ‘மகாஜனன்’ புதிர்ப் போட்டிக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

மகாஜன கல்லூரியின் பாவலர் துரையப்பா பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்ற இந்த பரிசளிப்பு நிகழ்வினை கல்லூரியின் அதிபர் மணிசேகரன் தலைமையேற்றார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே பேராசிரியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

சட்டத்தரணி இ.செல்வஸ்கந்தன் மறைந்த தனது தாயினதும் மனைவியினதும் ஞாபகார்த்தமாக  தனது கல்லூரியூடாக புதிர்ப் போட்டியை மாவட்ட ரீதியாக செய்து வருகிறார். இது பாராட்டத்தக்க விடயமாகும்.

இந்த நிகழ்வில் நான் கலந்துகொள்வதையிட்டு பெருமிதம் கொள்கிறேன். மகாஐன கல்லூரி சிறந்த ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. அதற்கு இன்றைய நிகழ்ச்சி எடுத்துக்காட்டாகும்.

இந்த போட்டியானது தேசிய ரீதியில் நடத்தப்பட வேண்டும். பலரும் வடக்கு மாகாணம் கல்வியில் பின்தங்கியுள்ளது என கூறி, பல விடயங்களை செய்யவேண்டும்; அதற்கு நிதி தேவை என கூறி பலருடனும் பலவிதமாக பேசுகிறார்கள். ஆனால், செயல்பாட்டில் இல்லை.

சட்டத்தரணி தனது முழுமையான நிதி பங்களிப்பில் மாவட்ட ரீதியாக மாணவர்களை முழுமையானவர்களாக உருவாக்குவதற்கு இந்த போட்டியை நடத்தி வருகிறார்.

இன்றைக்கும் ‘மகாஜனன்’ என்று சொல்வதில் நாங்கள் காணுகின்ற பெருமைகள் அனைத்தும்   கல்வியின் முழுமையால் வெளிப்பட்டது.

அதன் வெளிப்பாடுதான் தரம் 9இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்கள் தொடர்பாக மாவட்ட ரீதியில் நடத்தப்படுகின்ற பரீட்சை ஆகும்.

இந்தப் பரீட்சை தேசிய ரீதியில் நடத்தப்பட வேண்டும். தேசிய ரீதியில் நடத்தப்படுகின்ற பரீட்சைகள் எல்லாமே வெறுமனே பரீட்சைக்கான தயார்ப்படுத்தலாக அமையும்.

உண்மையில் அதனை கடந்து நியமமாக நடத்தப்படுகின்ற பரீட்சைகளுக்கு அப்பால் பிள்ளைகளை தயார்ப்படுத்துவதற்கு இந்த 9ஆம் ஆண்டு பரீட்சையில் பிள்ளைகள் பெறுகின்ற புள்ளிகளானது, அப்பிள்ளைகளை மதிப்பிடுவதோடு, பிள்ளைகளை 10ஆம், 11ஆம் தரங்களுக்கு தயார்ப்படுத்துவதற்கு ஒரு முன் ஆயத்தம் செய்யவும் வழிவகுக்கும்.

அதுமட்டுமன்றி, இந்தப் பரீட்சைகள் பிள்ளைகளுக்கானது மட்டுமல்ல, பிள்ளைகளுக்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கான பரீட்சை; பாடசாலைகளுக்கு இடையிலான பரீட்சை ஆகும்.

இந்த பரீட்சை முடிவுகள் தருகின்ற தரவுகளை வைத்துக்கொண்டு நாங்கள் விழிப்புணர்வுடன் எதிர்வரும் நாட்களை திட்டமிடுவோம்.

தரம் 9 முதல் க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் வரை பிள்ளைகள் எந்தத் திசையில் போகவேண்டும் என்பதை தீர்மானிக்கக்கூடிய பரீட்சை என்ற வகையில் இந்த புதிர்ப் போட்டி தீர்க்கதரிசனம் மிக்க பரீட்சையாகும்.

சட்டத்தரணி செல்வஸ்கந்தன் தனியொரு மனிதனாக இதனை செய்யமுடியும் என்றால் இந்தக் கல்வியுலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒருமனதாக இணைந்து தேசிய ரீதியாக இப்பரீட்சையை நடத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை.

கல்வியாளர்கள் ஒருமித்த மனம் கொண்டவர்கள். இதில் இணைந்து மாணவர்களை முழுமையானவர்களாக உருவாக்க தங்களது ஒருமித்த ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றார்.

மேலும், தரம் 9 மாணவர்களுக்காக நடத்தப்படுகின்ற ‘மகாஜனன்’ கணித, விஞ்ஞான திறன்காண் போட்டிப் பரீட்சையில் முதலாம் இடத்துக்கு 40 ஆயிரம் ரூபாவும், இரண்டாம் இடத்துக்கு 30 ஆயிரம் ரூபாவும், மூன்றாம் இடத்துக்கு 20 ஆயிரம் ரூபாவும், அத்தோடு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை பல்கலைக்கழக புகுமுக பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கும், மாவட்ட ரீதியில் முன்னணி வகிக்கும் மாணவர்களுக்கும் பணப்பரிசில்கள் வழங்கப்படுகிறது.

குறிப்பாக, பொறியியல் பீடத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாவும், வர்த்தகத்துறை மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவும், கலைத்துறை மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவும், தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்