பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் – சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதிக்கு முன்னதாக ஆசிரியர் நியமனம் வழங்குவதாக கல்வி அமைச்சரினால் உறுதிமொழி வழங்கப்பட்டது.
எனினும், பரிட்சையின் பெறுபேறுகள் தாமதமாவதனால் இவர்களது நியமனம் தாமதமாவதாகவும், ஆசிரியர் நியமனங்களை காலவரையறையின்றி பிற்போட்டிருப்பதாகவும் அண்மையில் அறிவித்தல் வந்திருந்தது.
இந்த நிலைமை தொடர்ந்தால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என இலங்கை ஆசிரியர் சங்கங்கத்தின் உபதலைவர் ஜீவராசா ருபேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கம் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கடந்த வருடம் தங்களுடைய ஆசிரியர் கற்றலினை நிறைவு செய்த கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னதாக ஆசிரியர் நியமனம் வழங்குவதாக உறுதி மொழி வங்கப்பட்டது.
இருப்பினும் காலவரையறையின்றி நியமனம் வழங்கும் செய்ற்பாடு பிற்போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை நாங்கள் ஆராய்ந்து பார்க்கின்ற போது அவர்களுக்கு பரிட்சை நடைபெற்று, பரிட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு தாமதமாவதனால் இவர்களது நியமனம் தாமதமாவதாகவும் கதை கூறப்பட்டிருக்கின்றது.
இருந்த போதும் இவர்களுடைய நியமனத்தினை வழங்குவதற்கு தேர்தல் திணைக்களம் அனுமதி வழங்கி இருக்கின்றது. அவ்வாறு அனுமதி வழங்கியதன் பிற்பாடு ஏன் இந்த மாணவர்களுக்கான ஆசிரியர் நியமனத்தினை பிற்போடுகின்றார்கள் என்கின்ற பாரிய பிரச்சினை எங்களுக்கு எழுந்திருக்கின்றது.
கடந்த காலத்திலே அரசாங்கத்தினுடைய திடீர் அறிவித்தலின்படி அரச ஊழியர்களின் ஓய்வு பெறுகின்ற வயதெல்லை மாற்றப்பட்டது. இதன் மூலமாக பல ஆசிரியர்கள் ஓய்வு பெற்றிருந்தார்கள். இதனால் பாடசாலையில் பாரிய அளவில் தளம்பல் நிலை ஏற்பட்டு இருக்கின்றது.
இந்த தளம்பல் நிலையினை சீர் செய்வதற்கு இந்த கல்வியியல் கல்லூரியின் ஆசிரியர்களுடைய நியமனத்தினை விரைவாக வழங்க வேண்டும். கல்வி அமைச்சருக்கு நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம், தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் இது பற்றிய கருத்துக்களை கூறுகின்றார். எங்களுடைய கலந்துரையாடலிலும் இது பற்றிய கருத்துக்களை கூறுகின்றார்.
ஊடகத்திற்கும் தெரிவிக்கின்றார். இருந்த பொழுதிலும் ஆசிரியர் நியமனத்தினை வழங்குகின்ற காலத்தினை நீட்டிக்கொண்டே செல்கின்றார். இவ்வாறு தொடர்ச்சியாக காலத்தினை நீட்டிக்கொண்டு செல்வதனால் அந்த ஆசிரிய மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள்.
இந்த ஆசிரிய மாணவர்கள் பாடசாலைகளிலே பயிற்சிக்காக இணைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் 5000 ரூபாய் கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது. இந்தத் தொகையை அதிகமாக அவர்களுக்கு வழங்குங்கள் என நாங்கள் கேட்டிருந்த போது, அரசாங்கம் அதனை வழங்கவில்லை.
இந்த காலகட்டத்தில் ஏழை ஆசிரிய மாணவர்கள் கடன் வாங்கியே தங்களது கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அதாவது அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கான வாடகை, உணவு போன்றவற்றிற்கு போக்குவரத்து போன்றவற்றிற்கு அதிக செலவினை செலவழித்திருந்தார்கள்.
இதற்கு அவர்கள் வாங்கிய கடனினை இன்று செலுத்த முடியாத நிலையில் கஷ்டப்படுவதாகவும் பல ஆசிரிய மாணவர்கள் எம்மைத்தொடர்பு கொண்டு தெரிவித்து இருக்கிறார்கள்.
எனவே இவர்களுடைய இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு மிக விரைவாக ஆசிரியர் நியமனத்தினை வழங்குமாறு நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம்.
அவ்வாறு வழங்கப்படாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். இது தொடர்பாக கல்வி அமைச்சருக்கு எழுத்து மூலமான அறிவித்தலையும் வழங்கி இருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை