தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கான சூழ்ச்சிகளை முறியடிப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை – ஜே.வி.பி

நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மதித்து விரைவில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்காக முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகளை முறியடிப்பதும் ஆணைக்குழுவின் தவிர்க்க முடியாத கடமையாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் உள்ளூராட்சிமன்றங்களின் ஆயுட்காலம் நிறைவடைகிறது. அதனை மீண்டும் நீடிக்க முடியாது.

அவ்வாறெனில் உள்ளூராட்சிமன்றங்களுக்கான தலைவர்களோ அல்லது உறுப்பினர்களோ காணப்பட மாட்டார்கள். இது வடக்கு மக்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நீதிமன்றத் தீர்ப்புடன் தேர்தலை நடத்துவதில் காணப்பட்ட பாரதூரமான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்தும் தேர்தலுக்கான நிதியை திறைசேறி செயலாளரால் விடுவிக்காமலிருக்க முடியாது.

தேர்தல் தொடர்பான இறையான்மைப் பலத்தை சவாலுக்குட்படுத்த முடியாது என்பது நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாகியுள்ளது.

ஆனால், நீதிமன்றம் இவ்வாறான தீர்ப்பை வழங்கியுள்ள போதிலும் , தேர்தலை நடத்தாமலிருப்பதற்கான முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கைவிடவில்லை.

தேர்தலுக்கு அஞ்சுகின்றமையின் காரணமாகவே அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர். தற்போதைய அரசாங்கத்துக்கும் , ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் மக்கள் ஆணை கிடையாது என்பது தெளிவாகியுள்ளது.

தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு இந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் மேலும் பல சூழ்ச்சிகளில் ஈடுபடக் கூடும்.

திறைசேரி மற்றும் அரச அச்சகம் என்பவற்றுக்கு தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று நீதிமன்ற தீர்ப்பில் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனினும் தேர்தல் ஆணைக்குழு இவர்களுடன் பேசுவதற்கு எதுவும் இல்லை.

எனவே, ஆணைக்குழு கூடி தேர்தலை நடத்தக் கூடிய மிக அருகிலுள்ள தினத்தை அறிவிக்க வேண்டும். அதனை விடுத்து தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கான சதித்திட்டத்துக்கு இடமளித்து விடக் கூடாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.