பலமான அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள முடியுமான தேர்தலுக்கு ஜனாதிபதி விரைவாக செல்வார் – சான்திநி கோன்கஹகே

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டு நாட்டை ஆட்சி செய்யவே ரணில் விக்ரமசிங்க விருப்புகிறார். அதனால் தனி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள விரைவாக தேர்தலுக்கு செல்வார்.

ஆனால் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் அதனை செய்ய முடியாமல் இருக்கிறது. அதற்கு குறிப்பிட்டதொரு கால அவகாசம் வழங்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி லக்வனிதா அமைப்பின் தலைவி சான்திநி கோன்கஹகே தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகளையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருகிறார்.

அவர் பிரதமராகப் பதவி ஏற்றதில் இருந்து பொருளாதாரத்தை எவ்வாறு தலைதூக்கச்செய்வது என்ற சிந்தனையுடன் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வந்தார்.

அதன் பயனாகவே கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் நாட்டில் இருந்து வந்த வரிசை யுகத்துக்கு தீர்வுகாண முடியுமாகியது. அதனை நாங்கள் கண் முன்னே காண்கிறோம்.

அதேபோன்று பொருள்களின் விலையேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண அவர் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவ்வாறான நிலையில் தேர்தல் ஒன்றுக்கு செல்வதால், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப இதுவரை மேற்கொண்டுவந்த திட்டமிட்ட நடவடிக்கைகள் பாதிக்கப்படும்.

நாட்டின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு விசேட ஒழுங்குவரிசை ஒன்றைக் கடைப்பிடித்தே நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறானதொரு நடவடிக்கையை பிற்பற்றி செயற்பட்டதாலே பொருளாதார நெருக்கடி நிலைமையை ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமாகி இருக்கிறது.

எமது நாடு தொடர்ந்தும் யாசகம் கேட்கும் நிலையில் இருக்க முடியாது. முன்னேற்றமடைய வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களையே ஜனாதிபதி மேற்கொண்டு வருகிறார்.

அத்துடன் நாட்டை நிர்வகிக்க ரணில் விக்ரமசிங்கவுக்கும் பலம்மிக்க அரசாங்கம் ஒன்று தேவை. தொடர்ந்து இந்த நிலையில் செயற்பட முடியாது.

அதனால் இன்னும் சில மாதங்களில் அதற்குத் தேவையான தேர்தலை நடத்துவார். மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒருபோதும் அவர் பறித்தவரல்லர்.

ஆனால் தற்போது மக்களை வாழவைக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறார். ரணில் விக்ரமசிங்கவின் சூசகமான வேலைத்திட்டங்களால் எமது அந்நிய செலாவணி அதிகரித்து வருகிறது.

அதனால் நாங்கள் எடுத்த கடன்களைத் திருப்பிக்கொடுக்க முடியுமான நிலை ஏற்பட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார். இது எமக்குப் பெருமையாகும்.

அதனால் எதிர்க்கட்சியினர் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இவர்கள் மக்களின் எதிர்காலம், நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக சிந்திப்பவர்களல்லர். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவோ மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கவோ எந்த வேலைத்திட்டத்தையும் இதுவரை இவர்கள் முன்வைக்கவில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.