கட்டுப்பணம் ஏற்கும் பொறுப்பிலிருந்து மாவட்ட செயலாளர்களை விலக்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானிக்கவில்லை – விஜித ஹேரத்

கட்டுப்பணம் ஏற்றல் பொறுப்பில் இருந்து மாவட்ட செயலாளர்களை விலக்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானிக்கவில்லை என பிரதமர் சபையில் பொய்யுரைத்துள்ளார்.

இந்த விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது, ஆகவே நாடாளுமன்ற சிறப்புரிமை குழு ஊடாக இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சபையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மோட்டார் வாகனச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் –

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாகி பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வது அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையாகக் காணப்படுகிறது. பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கண்டு விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிட்டு பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் கிடைக்கப் பெற்றவுடன் அதனை ஓர் ஆதாரமாகக் கொண்டு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட உலக நாடுகளிடம் கடன் பெறலாம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு மேன்மேலும் கடன் பெறுவது பொருளாதாரப் பாதிப்பை மேலும் நெருக்கடிக்குள்ளாகும். நாட்டைத் தொடர்ந்தும் கடன் சுமைக்குள் தள்ளும்.

பொருளாதாரப் பாதிப்புக்குத் தீர்வு கண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது, அவ்வாறாயின் உள்ளூhட்சி மன்றத்தேர்தலை நடத்தலாம். சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. உயர்நீதிமன்றம் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவே தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் சரியா அல்லது பிழையா என்பதை அரசாங்கம் அறிந்துகொள்ள வேண்டும். மக்களின் ஆதரவு இல்லாமல் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. ஆகவே உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவேண்டும்.

கட்டுப்பணம் பொறுப்பேற்றல் கடமையில் இருந்து விலகுமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாவட்ட செயலாளர்களுக்கு விடுத்த அறிவித்தல் தீர்மானத்தை அமைச்சரவை எடுக்கவில்லை என பொது நிர்வாக அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்,ஆனால் அவ்வாறான தீர்மானம் அமைச்சரவையில் எடுக்கப்பட்டதாகத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் பிரதமர் பொய்யுரைத்து நாடாளுமன்றத்தை தவறாக வழி நடத்தியுள்ளார் எனக் கருத வேண்டும். இந்த விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது, ஆகவே, இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமை குழு ஊடாக அவதானம் செலுத்த வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.