தென்மராட்சியில் கட்டாக்காலிகளால் அழிவடையும் சிறுதானியச் செய்கை-விவசாயிகள் முறைப்பாடு.

சாவகச்சேரி
கைதடி கமநலசேவை நிலைய எல்லைப்பரப்பிற்குட்பட்ட தனங்களப்பு மற்றும் கைதடி நாவற்குழி பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தால் சிறுதானியச் செய்கை மற்றும் நெற்பயிற்ச்செய்கைகள் அழிவடைந்து வருவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில்;
தனங்களப்பு மற்றும் கைதடி நாவற்குழி பகுதிகளில் நெல் அறுவடை முழுமையாக நிறைவடையாத நிலையில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
குறித்த கட்டாக்காலி மாடுகள் நெல் வயலை சேதப்படுத்துவதுடன்-நெல் அறுவடையின் பின்னரான சிறுதானிய செய்கைக்கும் சேதம் ஏற்படுத்தி வருகின்றன.
சிறுதானிய செய்கைகள் முட்கம்பியால் அடைக்கப்பட்ட அடைப்பிற்குள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் சில இடங்களில் முட்கம்பிகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் காணப்படுவதால் மாடுகள் ஒட்டுமொத்த சிறுதானியத்திற்கும் சேதம் விளைவிக்கின்றன.
விவசாய சம்மேளனம் மற்றும் கமநல சேவை நிலையம் ஆகியன விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சிறுதானிய செய்கைகள் கட்டாக்காலிகளால் முழுமையாக அழிக்கப்படக்கூடிய நிலை காணப்படுகிறது.
வைகாசி 28வரை கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுவான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ள போதிலும் கால்நடை வளர்ப்போர் பொறுப்பற்று நடந்து கொள்வதாக மேலும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்