பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி, அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்றிட்டங்களை வரவேற்கிறோம் – சார்ல்ஸ் நிர்மலநாதன்

பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை வரவேற்கிறோம். சிறந்த திட்டங்களை முழுமையாக வரவேற்போம். இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்திக்கொள்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கலால் சட்டம் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –

ஜனாதிபதி இந்த சபையில் உரையாற்றும்போது, நிதி அமைச்சர் என்ற வகையில் தானும் மத்திய வங்கி ஆளுநரும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளில் கையெழுத்திட்டு நிறைவேற்றியதாக நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.

இதனை நல்ல விடயமாக நாங்கள் பார்க்கின்றோம். பொருளாதார ரீதியில் அவரினதும், அவரின் அதிகாரிகளினதும் திறமையாக இதனைப் பார்க்கின்றேன். பொருளாதார நிலைமைகளுக்கு ஈடுகொடுப்பதற்காக முன்னெடுத்த இந்த வேலைத்திட்டங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

குறைபாடுகளைக் கூறினாலும், நல்ல விடயங்களுக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும். ஜனாதிபதியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அதில் வட மாகாணத்திலுள்ள கடற்பரப்பில் வெளிநாட்டு மீனவர்கள் மீன் பிடிப்பதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பில் நிரந்தரத் தீர்வை ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்திய மீனவர்களுக்கு எமது கடலில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுவதை தொடர்ந்து வடக்கில் மீனவர்களிடையே கொந்தளிப்பு நிலைமை காணப்படுகிறது.

எமது மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. வெளிநாட்டவர்களுக்கு எமது கடலில் மீன் பிடிக்க அனுமதி வழங்குவதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நானும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் ஜனாதிபதியை சந்தித்து வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துமாறு கூறியிருந்தோம்.

அதன்படி, அது தொடர்பில் கலந்துரையாடி நேரமொன்றை ஒதுக்குவதாகக் கூறியுள்ளார்.

ஒரு நாட்டைப் பொருளாதாரத்தில் இருந்து மீட்க வேண்டுமாயின், அந்த மக்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு செய்யாமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.