அரசியல் கட்சிகளில் உள்ள பயங்கரவாதிகளே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் – கஞ்சன விஜேசேகர!

சாதாரண மக்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அரசியல் கட்சிகளில் உள்ள பயங்கரவாதிகளே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை பெரும்பாலான தரப்பினர் தற்போது மறந்து விட்டார்கள்.

அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களினால் பொருளாதார பாதிப்புக்கு ஒப்பீட்டளவில் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை எதிர்க்கட்சிகள் நன்கு அறிவார்கள். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக அவர்கள் அதனை பகிரங்கமாக குறிப்பிடுவதில்லை.

கடந்த ஆண்டு பல மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட போது ஒரு தரப்பினர் வீதிக்கு இறங்கி தீ பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தற்போது 24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படும் போதும் ஒரு தரப்பினர் தீ பந்தம் ஏந்தி தற்போது போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

நாட்டின் நிதி நிலையை மென்மேலும் தீவிரப்படுத்தும் வகையில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினர் ஒரு அரசியல் கட்சிக்கு சார்பாக செயற்படுகிறார்கள்.

ஒரு தரப்பினர் தான் அனைத்து போராட்டங்களையும் முன்னெடுக்கிறார்கள். கடந்த வாரம் தொழிற்சங்கத்தினர் மேற்கொண்ட தொழிற்சங்க போராட்டத்தினால் தேசிய வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். நாடு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என பொது மக்கள் கருதுகிறார்கள்.

சாதாரண மக்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயற்படும் பயங்கரவாதிகள் தான் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு தடையான போராட்டங்கள் மீது சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலில் ஈடுபடுபவர்கள் தாக்குதல் மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை மென்மேலும் தீவிரப்படுத்தும் வகையில் திட்டமிட்ட வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையான போராட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.“ எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.